ரெயில்வே தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா
சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் ரெயில்வே தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் ரெயில்வே தேர்வான என்.டி.பி.சி தொழில் நுட்பம் அல்லாத பணிகளுக்கும், குரூப்-டி பணிகளுக்கும் கடந்த ஆண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் எழுத்து தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் படித்த 195 மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்று பணி நியமன ஆணை பெற்று உள்ளனர். இவர்களுக்கான பாராட்டு விழா தூத்துக்குடி சுரேஷ் ஐ.ஏ.எஸ்.அகாடமியில் நடந்தது.
விழாவுக்கு சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமி நிறுவனர் சுகேஷ் சாமுவேல் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களை பாராட்டி பேசினார். அப்போது, மாணவர்கள் மத்திய, மாநில அரசு பணிக்கு நன்றாக பயிற்சி பெற்று அதிக அளவில் தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பணிக்கு செல்ல வேண்டும். மேலும் தூத்துக்குடியை மாசு இல்லாத மாநகராட்சியாக உருவாக்க வேண்டும் என்று கூறினார்.
விழாவில் தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, எடிசன், ராமச்சந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கனிமுருகன், வணிகவரித்துறை அலுவலர் ஸ்ரீதேவி, வங்கி பணி ஒருங்கிணைப்பாளர் ராஜா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.