செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்தியதற்கு பாராட்டு: பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி
செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதற்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை,
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும், அரசும் மிகச்சிறப்பாக நடத்தி உள்ளார்கள்.
உலகெங்கிலும் இருந்து இந்த போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாசாரத்தையும், விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுகள் - என பிரதமர் நரேந்திர மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சமூக வலைத்தளப்பதிவு மூலம் தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடிக்கு நன்றி
இதற்கு நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, தங்களது கனிவுமிகு பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. விருந்தோம்பலும், தன்மானமும் தமிழர்களின் இணைபிரியா இருபெரும் பண்புகள் ஆகும்.
தொடர்ச்சியான உங்களது ஆதரவையும், இதுபோல இன்னும் பல உலக அளவிலான போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளை தமிழ்நாட்டுக்கு வழங்குமாறும் தங்களை கோருகிறேன். யாதும் ஊரே யாவரும் கேளிர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.