மலேசியா தமிழ் மாநாட்டில் பங்கேற்ற பெரியகுளம் பேராசிரியைக்கு பாராட்டு
மலேசியா தமிழ் மாநாட்டில் பங்கேற்ற பெரியகுளம் பேராசிரியைக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
மலேசியாவில் 11-வது உலக தமிழாராய்ச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்த பேராசிரியை பத்மினி பாலா கலந்துகொண்டார். அப்போது அந்த மாநாட்டில் 'தேனி மாவட்டத்தின் தொல்லியல் சுவடுகள்' என்ற தலைப்பில் அவர் ஆய்வு உரையாற்றினார்.
இதையடுத்து உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்துகொண்டதுடன், அங்கு தேனி மாவட்டம் குறித்து பேசி பெருமை சேர்த்ததற்காக பேராசிரியை பத்மினி பாலாவுக்கு, பெரியகுளம் தென்கரை கிளை நூலகத்தில் வாசகர் வட்ட குழு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு வாசகர் வட்ட குழு தலைவர் அன்புக்கரசன் தலைமை தாங்கினார். வடகரை நூலக வாசகர் வட்ட தலைவர் மணி கார்த்திக், கவிஞர் அர்ஜூனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் சவடமுத்து வரவேற்று பேசினார்.
இதில், தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல் சங்க கூட்டமைப்பின் தென் மண்டல செயலாளர் முத்துராமலிங்கம், மாநில துணைத்தலைவர் பாலமுருகன், தாமரைக்குளம் பேரூராட்சி துணைத்தலைவர் மலர்கொடி சேதுராமன், மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் சிதம்பரசூரியவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பேராசிரியை பத்மினிபாலா ஏற்புரையாற்றினார்.