விழுப்புரம்- திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் ஆமை வேகத்தில் நடந்து வரும் அணுகுசாலை பணிகள்


விழுப்புரம்- திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் ஆமை வேகத்தில் நடந்து வரும் அணுகுசாலை பணிகள்
x
தினத்தந்தி 2 Jan 2023 12:15 AM IST (Updated: 2 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம்- திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் ஆமை வேகத்தில் நடந்து வரும் அணுகுசாலை பணிகள் விரைவில் முடிக்கப்படுமா? என்று பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

விழுப்புரம்

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை கடந்த 2008-ம் ஆண்டில் 4 வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த சாலை விழுப்புரம் நகர பகுதிக்குள் வராமல் புறவழிச்சாலையாக கடந்து செல்கிறது. இச்சாலையின் குறுக்கே விழுப்புரம் புறவழிச்சாலையில் திருக்கோவிலூர் நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் ரெயில்வே மற்றும் சாலை மேம்பாலம் கட்டப்பட்டு புறவழிச்சாலை நேர்படுத்தப்பட்டது. ஆனால் மேம்பாலத்துடன் அணுகு சாலை அமைக்கப்படவில்லை.

இதனால் திருக்கோவிலூர், மாம்பழப்பட்டு, காணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்னை மார்க்கத்தில் நேரடியாக புறவழிச்சாலையில் செல்வதற்கு வழியில்லாமல் போனது.

நெரிசலில் சிக்கும் ஆம்புலன்சுகள்

இதன் காரணமாக திருக்கோவிலூர் மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பிற்கு வந்து பின்னர் அங்கிருந்து புதிய பஸ் நிலையம், எல்லீஸ்சத்திரம் சாலை வழியாக சுமார் 5 கி.மீ. தூரம் சுற்றிக்கொண்டு புறவழிச்சாலையை கடந்து சென்னை, திருச்சி மார்க்கம் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட, விழுப்புரம் நகரப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி காலதாமதமாக புறவழிச்சாலையை அடையும் நிலை இருக்கிறது. இதனால் சில சமயங்களில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

அணுகுசாலை

நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டபோதே இப்பிரச்சினையை உணர்ந்த திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த பலர், விழுப்புரம் புறவழிச்சாலையுடன் திருக்கோவிலூர் சாலையையும் இணைக்கும் வகையில் மாம்பழப்பட்டு சாலை மேம்பாலம் அருகே அணுகு சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசிடமிருந்து ஒப்புதலும் வந்தது. இங்கு ரூ.4 கோடி மதிப்பில் சாலை பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் சாலை அமைக்கும் பணிக்காக அளவீடு செய்யும் பணிகள் முடிக்கப்பட்டு அப்பகுதியில் செல்லும் விழுப்புரத்தான் வாய்க்காலை கடந்து செல்ல ஏதுவாக பாலம் அமைப்பதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் அப்படியே கிடப்பிலேயே உள்ளது. சாலை அமைக்க அளவீடு செய்து பல மாதங்கள் ஆன நிலையில் தற்போதுதான் சாலைப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

ஆமை வேகத்தில்...

இங்குள்ள மேம்பாலத்தின் கீழ்பகுதியில் வடக்குப்புறமாக 300 மீட்டர் தூரத்திற்கும், 5.5. மீட்டர் அகலத்திலும் அணுகுசாலை அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் திருக்கோவிலூர், மாம்பழப்பட்டு, காணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இந்த அணுகு சாலை பணிகள் ஆமைவேகத்தில் நடப்பதாகவே அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் திருக்கோவிலூர் மார்க்கத்தில் இருந்து சென்னை, திருச்சி செல்பவர்கள், மிகுந்த போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் விழுப்புரம் நகரத்திற்குள் வந்துதான் செல்கின்றனர். அதேபோல் புதுச்சேரி மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் விழுப்புரம் நகரத்திற்குள் வந்துதான் செல்கின்றனர். இதனால் அவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதோடு அவர்களுக்கு நேர விரயமும் ஏற்படுகிறது.

விரைவில் முடிக்கப்படுமா?

எனவே மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு விழுப்புரம் புறவழிச்சாலையில் திருக்கோவிலூர் மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் செல்ல வசதியாக அணுகுசாலை பணியை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த அணுகு சாலை பணிகள் முடிந்துவிட்டால் விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை பெருமளவில் குறைய வாய்ப்புள்ளது.

ஏமாற்றம் அளிக்கிறது

இது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன் கூறுகையில், விழுப்புரம் புறவழிச்சாலை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருக்கோவிலூர் மார்க்கத்தில் அணுகுசாலை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. புறவழிச்சாலை அமைக்கப்பட்டபோதே இந்த அணுகு சாலை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அணுகு சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்ட நிலையில் இப்போதுதான் பணிகள் தொடங்கியுள்ளது. எனினும் பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. திருக்கோவிலூர் மார்க்கத்திலிருந்து சென்னை செல்லும் வாகனங்கள் சில மாதங்களுக்கு முன்பு வரை கண்டாச்சிபுரம், கெடார் வழியாக முண்டியம்பாக்கம் வழியாக விழுப்புரம் நகரம் செல்லாமலேயே சென்று வந்தன. இந்நிலையில் தென்னமாதேவியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டதாலும், திருக்கோவிலூர்- கண்டாச்சிபுரம் சாலையில் பல்வேறு இடங்களில் பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருவதாலும் திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வாகனங்கள் விழுப்புரம் சென்றே சென்னை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிக்கும் மற்றும் சென்னைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சிக்கி காலதாமதம் ஆகிறது. இதை தவிர்க்க உடனடியாக அணுகு சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும் என்பது அனைத்துதரப்பு மக்களின் கருத்தாகும் என்றார்.

நிதி ஒதிக்கீடு

விழுப்புரத்தை சேர்ந்த அய்யனார் கூறும்போது, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருக்கோவிலூர் மார்க்கமாக செல்வதற்கு வழியில்லாமல் விழுப்புரம் நகரத்துக்குள் வந்த பிறகு மற்ற நகரத்திற்கும், மாவட்டத்திற்கும் செல்லும் அவலநிலை நீண்ட காலமாக நீடித்து வந்த நிலையில் பல ஆண்டுகளாக மக்கள் போராட்டத்திற்கு பிறகு சமீபத்தில் அணுகுசாலை அமைப்பதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அங்கு சாலை பணிகள் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மிகவும் மந்தகதியிலேயே பணிகள் நடைபெறுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.


Next Story