மாற்றுத்திறனாளிகள் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
கோரிக்கைகளுக்கு ஏற்ப மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
கோரிக்கைகளுக்கு ஏற்ப மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
குறைதீர்க்கும் கூட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கி பேசுகையில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று, அதில் தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (நேற்று) நடந்தது.
இந்த சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் 198 கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அவா்கள் அளித்துள்ளனர். அவற்றுள் 3 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பயனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டுள்ளது.
நலத்திட்ட உதவிகள்
மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் மீதான உள்ள கோரிக்கைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்கள் வழங்கப்படும். குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் உள்ள மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்கிட தக்க நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றார்.
தொடர்ந்து மாற்றத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், பேட்டரியில் இயங்கும் சக்கரநாற்காலிகள், இயற்கை மரணம் ஈமசடங்கு உதவித்தொகை, 3 சக்கர சைக்கிள், காதொலிகருவி, இலவச பஸ் பயண சலுகை அட்டை, கண் கண்ணாடி என மொத்தம் ரூ.4 லட்சத்து 39 ஆயிரத்து 630 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
வீட்டுமனை பட்டா
மேலும் 7 நபர்களுக்கு ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினையும் கலெக்டர் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலசந்தர், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா, மாற்றுத்திறனாளி நலஅலுவலர் புவனா, தொழில் மைய பொதுமேலாளர் திரிபுரசுந்தரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.