அரக்கடவு கிராமத்துக்குள் வெள்ளம் புகுந்தது


அரக்கடவு கிராமத்துக்குள் வெள்ளம் புகுந்தது
x

பந்தலூரில் கனமழை பெய்தது. அரக்கடவு கிராமத்துக்குள் வெள்ளம் புகுந்தது. பந்தலூர்-கூடலூர் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி

கூடலூர்,

பந்தலூரில் கனமழை பெய்தது. அரக்கடவு கிராமத்துக்குள் வெள்ளம் புகுந்தது. பந்தலூர்-கூடலூர் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊருக்குள் புகுந்த வெள்ளம்

கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி, தேவர்சோலை பேரூராட்சி சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும் பல இடங்களில் ஊருக்குள் வெள்ளம் புகுந்து வீடுகள் மற்றும் விவசாய பயிர்கள் சேதமானது. பலத்த மழையால் கம்மாத்தி அணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதன்காரணமாக புத்தூர் வயல் சந்திப்பு, அரக்கடவு, குற்றிமுற்றி பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்தநிலையில் நேற்று காலை மழையின் தாக்கம் குறைந்து வெயில் அடித்தது. இதனிடையே கம்மாத்தி அணையில் இருந்து புத்தூர்வயல், தொரப்பள்ளி வழியாக மாயாருக்கு செல்லும் கால்வாயில் பல இடங்களில் முறையாக தூர்வாராததால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து அரக்கடவு, புத்தூர் வயல் சந்திப்பு பகுதி மக்கள் கூறியதாவது:-

தூர்வார வேண்டும்

சில மாதங்களுக்கு முன்பு கம்மாத்தி அணையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை ஆற்று கால்வாய் தூர்வாரப்பட்டது. அதன் பின்னர் அரக்கடவு, புத்தூர்வயல் இடையே கால்வாய் முறையாக தூர்வாரப்படவில்லை.

இதன் காரணமாக பலத்த மழையால் அரக்கடவு கிராமத்துக்குள் வெள்ளம் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது. எனவே, கால்வாயை முறையாக அளவீடு செய்து தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மரம் விழுந்தது

பந்தலூர் தாலுகாவில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அத்திகுன்னா கே.கே.நகர் பகுதியில் விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. பந்தலூரில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவல் அறிந்த தேவாலா போலீசார் மற்றும் பயணிகள் மரத்தை வெட்டி அகற்றினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. வெள்ளேரி ஆற்றை ஒட்டியுள்ள விளையாட்டு மைதானத்தை வெள்ளம் சூழ்ந்தது. பந்தலூர் 17 சென்டி மீட்டர் மழை பதிவானது.


Next Story