ஏரல் தங்க நகை அடகுநிறுவன மேலாளர் கைது


ஏரல் தங்க நகை அடகுநிறுவன மேலாளர் கைது
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஏரலில் திருட்டு வழக்கில் தொடர்புடைய தங்கச்சங்கிலியை ஒப்படைக்க மறுத்த தனியார் நகை அடகு நிறுவன மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஏரலில் திருட்டு வழக்கில் தொடர்புடைய தங்கச்சங்கிலியை ஒப்படைக்க மறுத்த தனியார் நகை அடகு நிறுவன மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

நகை வழிப்பறி

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மேல ஆழ்வார்தோப்பு சந்திரசேகர் என்பவரது மனைவி செந்தூர்கனி. இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆழ்வார்தோப்பில் நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துசென்று விட்டார்.

இதுகுறித்து புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகளையை சேர்ந்த முத்துசாமி மகன் ஐயப்பன் (வயது 25) என்ற வாலிபரை கைது ெசய்தனர். அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது, வழிப்பறி செய்த தங்க சங்கிலியை ஏரலில் உள்ள தனியார் தங்க அடகு நிறுவனத்தில் மாமியார் தங்கலட்சுமி பெயரில் அடகு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவரும் கைது செய்யப்பட்டார்.

நகையை ஒப்படைக்க மறுப்பு

இதைத்தொடர்ந்து திருட்டு வழக்கில் தொடர்புடைய தங்க சங்கிலியை ஒப்படைக்குமாறு போலீசார் அந்த நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பினர். டிச. 24-ந்தேதி அந்த சங்கிலியை ஒப்படைப்பதாக நிறுவன மண்டல அலுவலர் மணிவண்ணன் நேரில் ஆஜராகி தெரிவித்துள்ளார். ஆனால், நகையை ஒப்படைக்கப்படாத நிலையில் போலீசார் மீண்டும் அனுப்பினர். அந்த நிறுவனத்தினர் சம்மனை வாங்க மறுத்துவிட்டனராம்.

நிறுவன மேலாளர் கைது

இதைத் தொடர்ந்து போலீசார் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டு உத்தரவு பெற்று ஏரலில் உள்ள அந்த நகை அடகு நிறுவனத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு மாயவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், அன்னராஜ், மேரிஜெமிதா உள்ளிட்டோர் சோதனையிட சென்றனர். இதற்கு அந்த நிறுவன பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் அந்த நிறுவன மேலாளர் வேலவனை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர், திருட்டு நகையை ஒப்படைக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.


Next Story