ஆரணி அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை
மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் ஆரணி அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஆரணி
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது.
ஆரணி வட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 120 மாணவர்கள் கபடி, கிரிக்கெட், கால்பந்து, இறகுப்பந்து, பூப்பந்து, ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் திருவண்ணாமலையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு சிலம்பம் போட்டியில் 2 பேர், குத்துச்சண்டை போட்டியில் 4 பேர், 2 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2 பேர், மாவட்ட அளவில் 2-ம் இடமும், 3-ம் இடமும் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இதேபோல் கைப்பந்து, சிலம்பம், குத்துச்சண்டை 2 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகளில் மொத்தம் 26 பேர் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களை பள்ளி பெற்றோர் ஆசிரியர் தலைவர் பீமராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அரவிந்தன், தலைமை ஆசிரியை எம்.வசந்தா, உடற்கல்வி ஆசிரியர்கள் கலைச்செல்வி, துரைசிங்கம் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.