ஆரணி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
ஆரணி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் கனிமொழி சுந்தர் தலைமையில் நடந்தது. ஒன்றியக்குழு துணைத்தலைவர் கே.டி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கு.இந்திராணி வரவேற்றார்.
கூட்டத்தில் உறுப்பினர் வி.பி.செல்வராஜ் பேசுகையில், நாங்கள் பொறுப்பேற்று 2 ஆண்டு காலம் ஆகிறது. நியமனக்குழு உறுப்பினர்கள் தேர்வு இதுவரை நடைபெறவில்லை. சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட நகராட்சி நிர்வாகத்திற்கு உடனடியாக நியமனக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்' என்றார்.
அதற்கு பதிலளித்து வட்டார வளர்ச்சி அலுவலர் பேசுகையில், 'தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி பிரிவு பிரதிநிதிகளின் நியமனக்குழு உறுப்பினர் தேர்வு இன்னும் நடைபெறவில்லை. உங்களுடைய கோரிக்கை கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
உறுப்பினர் ஜெயப்பிரகாஷ் பேசுகையில், 'ஆரணியில் உள்ள ஓட்டல்களில் அடிக்கடி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். தரமான உணவு வழங்கவில்லை என்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
உறுப்பினர் கவிதா பேசுகையில், 'எஸ்.வி.நகரம் ஊராட்சியில் பெருமாள் கோவில் தெருவில் முறையான வடிகால் கால்வாய் இல்லாததால் சாலையில் கழிவுநீர் செல்கிறது. கோவிலுக்கு செல்லக்கூடிய பக்தர்கள் கழிவுநீரில் கால் வைத்து தான் செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஒன்றிய பொறியாளர் மதுசூதனன் நன்றி கூறினார்.