திருவாரூர் நகராட்சி பள்ளி மாணவி வெண்கல பதக்கம் வென்று சாதனை
சர்வதேச வில்வித்தை போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்த திருவாரூர் நகராட்சி பள்ளி மாணவிக்கு ஓ.என்.ஜி.சி. சார்பில் பரிசு வழங்கப்பட்டது.
சர்வதேச வில்வித்தை போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்த திருவாரூர் நகராட்சி பள்ளி மாணவிக்கு ஓ.என்.ஜி.சி. சார்பில் பரிசு வழங்கப்பட்டது.
வில்வித்தை பயிற்சி
திருவாரூர் ஒன்றியம் பழவனக்குடி ஊராட்சி மருதப்பட்டினம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மனைவி மதனேஸ்வரி. இவர்களது மகள் யோகவி (வயது 13). இவர் திருவாரூர் நகராட்சி கவுரிசாமி பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த யோகவி யோகா போட்டிகளில் மாநில அளவில் பரிசுகள் பெற்று உள்ளார்.இந்தநிலையில் மாணவி யோகவிக்கு கராத்தே பயிற்சியாளர் குணா கராத்தே மற்றும் வில்வித்தை பயிற்சி அளித்தார். பயிற்சி பெற்ற மாணவி யோகவி மாவட்ட, மாநில அளவில் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றார்.
வெண்கல பதக்கம்
கடந்த ஏப்ரல் மாதம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த வில்வித்தை போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மாணவி யோகவி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அனுமதியுடன் கடந்த மே மாதம் 21 முதல் 25-ந் தேதி வரை நேபாள நாட்டில் பொகரா நகரில் நடந்த சர்வதேச வில்வித்தை போட்டியில் 14-வது வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் வெற்றி பெற்று வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.
பரிசு
இதைத்தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆகியோர் மாணவி யோகவியை நேரில் அழைத்து பாராட்டினர். மேலும் காரைக்கால் ஓ.என்.ஜி.சி. காவிரி படுகை நிறுவன செயல் இயக்குநர் அனுராக் வில்வித்தை போட்டியில் சர்வசேத அளவில் வெற்றி பெற்று வெண்கல பதக்கம் பெற்ற மாணவி யோகவியை நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார்.