மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலி


மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலி
x

சேலத்தில் இடைவிடாமல் பெய்த சாரல் மழை காரணமாக மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலியானார். ஏற்காட்டில் பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சேலம்

சேலத்தில் இடைவிடாமல் பெய்த சாரல் மழை காரணமாக மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலியானார். ஏற்காட்டில் பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சாரல் மழை

சேலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. பகலில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தாலும், மாலையில் மழை பெய்கிறது. சேலம் மாநகரில் நேற்று மதியம் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அதன்பிறகு சிறிது நேரத்தில் மழை நின்றுவிட்டது.

அதன்பிறகு மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து மாலை 5 மணி முதல் இடைவிடாமல் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் வேலை முடித்து வீடுகளுக்கு சென்ற வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தவாறு சென்றதை காணமுடிந்தது.

சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கிச்சிப்பாளையம், அன்னதானப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

கட்டிட மேஸ்திரி பலி

சேலம் கிச்சிப்பாளையம் காந்தி மகான் தெருவை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 27), கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் மாலை 6½ மணியளவில் தனது வீட்டின் அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் மழை பெய்ததால் மின் கம்பி அறுந்து தொங்கி ெகாண்டு இருந்தது. போதிய வெளிச்சம் இல்லாததால் அதை முனியப்பன் கவனிக்காமல் நடந்து வந்துள்ளார். இதில் முனியப்பன் மீது மின்சார கம்பி உரசியதால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

டாக்டர்கள் அவரைபரிசோதனை செய்தபோது, அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் முனியப்பனின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன முனியப்பனுக்கு வளர்மதி என்ற மனைவியும், 10 மாத பெண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்காட்டில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இதேபோல், ஏற்காட்டில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது. யாரும் எதிர்பார்க்காத நிலையில் மதியம் திடீரென மிதமான மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்து பெய்த மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கட்டிட தொழில், எஸ்டேட் தொழில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை சற்று அதிகரித்து காணப்பட்டது.

இந்த மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் இந்த மழையின் காரணமாக சுற்றுலா இடங்களை கண்டு ரசிக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

மழையின் காரணமாக வாகனங்களை இயக்க முடியாமல் சாலைகளில் ஊர்ந்து சென்றதை காணமுடிந்தது. ஒரு சில சுற்றுலா பயணிகள் தாங்கள் தங்கியிருந்த விடுதியை விட்டு வெளியே வராமல் அறைக்குள்ளேயே முடங்கினர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த மழையால் ஏற்காட்டில் குளிர்ச்சி நிலவியது.


Next Story