ரூ.11 கோடியில் செட்டிநாடு கட்டிட கலையில் கட்டப்பட்டது: கீழடி 'அகழ் வைப்பகம்' 5-ந்தேதி திறப்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
செட்டிநாடு கட்டிட கலையில் கட்டப்பட்ட கீழடி அகழ் வைப்பகத்தை வருகிற 5-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
திருப்புவனம்,
செட்டிநாடு கட்டிட கலையில் கட்டப்பட்ட கீழடி அகழ் வைப்பகத்தை வருகிற 5-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
அகழ் வைப்பகம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் பல்வேறு கட்டங்களாக அகழாய்வு நடந்து பல்லாயிரக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இவற்றை காட்சிப்படுத்த அகழ் வைப்பகம், 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.11 கோடியே 3 லட்சம் செலவில் கட்டப்பட்டு இருக்கிறது. உலோக பொருட்கள், மண்பாண்ட பொருட்கள், பழங்கால கட்டிட மாதிரிகள், காதணிகள், தங்க பொருட்கள் ஆகியவற்றுக்கு தனித்தனி கட்டிடங்களுடன் இந்த அகழ் வைப்பகம் கட்டப்பட்டு உள்ளது.
கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்கள், 2600 ஆண்டுகளுக்கு முந்தயவை என அறிவிக்கப்பட்டு்ள்ளன.
எனவே அதற்கு ஏற்ப பழமை மாறாமல் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏற்ப மர வேலைப்பாடுகளும் செய்யப்பட்டு்ள்ளன.
செட்டிநாடு கட்டுமான பாணியில் தேக்கு மரங்களால் தட்டு ஓடுகளுடன் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையிலும் கண்காணிப்பு கேமராக்கள், தானியங்கி தீ எச்சரிக்கை கருவிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த அகழ் வைப்பகத்தை வருகிற 5-ந்தேதி மாலையில், நேரில் வந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பார்வையிடுவதுடன், காட்சிப்படுத்தப்பட்டுள்ள கீழடி அகழாய்வு பொருட்களையும் பார்வையிடுகிறார்.
கலெக்டர் ஆய்வு
இந்தநிலையில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கீழடி அகழ் வைப்பகத்தில் நடைபெற்று வரும் திறப்பு விழா முன் ஏற்பாடுகள் தொடர்பாக நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-
கீழடி அகழாய்வு பணியில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்கள் மூலம் தமிழர்கள் 4000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நாகரிகத்துடன் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாகவும், அப்பொருட்களை உலகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து இங்கு வரும் மக்கள் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், செட்டிநாடு கலை நயத்துடன் ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் புதிய அகழ் வைப்பக கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவுக்கான முன் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன..
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், வருவாய் அலுவலர் மணிவண்ணன், தொல்லியல் துறை ஆணையர்(பொறுப்பு) சிவானந்தம், கீழடி கட்டிட மையம் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் மணிகண்டன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, திருப்புவனம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.