அழகுசேனை கிராமத்தில் நடந்த அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி
அழகுசேனை கிராமத்தில் நடந்த அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கண்ணமங்கலம்
அழகுசேனை கிராமத்தில் நடந்த அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கண்ணமங்கலம் அருகே உள்ள அழகுசேனை கிராமத்தில் திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த 8-ந் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தபசுமரம் ஏறும் நிகழ்வு நடைபெற்றது. அர்ச்சுனன் வேடமணிந்த நாடக நடிகர் தபசு செய்து ஈசனிடம் பாசுபதாஸ்திரம் வேண்டி தவம் செய்ததும், அப்போது ஈசன் ஈசுவரி குறவன் குறத்தி வேடத்தில் வந்து அர்ச்சுனன் தவத்தை கலைக்க ஆட்டம் பாட்டம் ஆடியபடி சென்றதும், இறைவன் என அறியாமல் அவர்களிடம் வாக்குவாதம் செய்ததும் பின்னர் குறவன் குறத்தி வேடத்தில் வந்த ஈசன் ஈசுவரி, அர்ச்சுனனுக்கு பாசுபதாஸ்திரம் வழங்கி சென்றதும் தத்ரூபமாக விளக்கப்பட்டது.
மேலும் தபசு மரத்தை சுற்றி குழந்தை வரம் வேண்டிய திருமணமான பெண்கள், திருமணம் வேண்டிய இளம்பெண்கள் ஆண்கள் தனித்தனியே சுற்றி வந்து வணங்கினர். தபசு மரத்தில் அர்ச்சுனன், தனது பையில் வைத்திருந்த பூ, பழம் உள்பட பல்வேறு பிரசாதங்களை கீழே பக்தர்களுக்கு வீசினார்.
வருகிற 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில் தீமிதி விழாவும் மறுநாள் தருமர் பட்டாபிஷேகமும் நடக்கிறது.