ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு
திருவள்ளுவர் பல்கலைக்கழக தரவரிசையில் சிறப்பிடம் பெற்ற ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கல்லூரி மாணவ- மாணவிகள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.
ஆற்காடு
திருவள்ளுவர் பல்கலைக்கழக தரவரிசையில் சிறப்பிடம் பெற்ற ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கல்லூரி மாணவ- மாணவிகள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.
திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கல்லூரி மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். மூன்றாம் ஆண்டு வேதியியல் துறை மாணவி எம்.துளசி 6-ம் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார். மூன்றாம் ஆண்டு கணிதத்துறை மாணவி எம்.ஷோபனா, வணிகவியல் துறை மாணவி எம்.சினேகா நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை புரிந்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும் இந்த கல்லூரியை சேர்ந்த பல மாணவ, மாணவிகள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி நிறுவனத் தலைவர் ஏ.கே.நடராஜன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஏ.என்.சரவணன், நிர்வாக அறங்காவலர் ஏ.என். செல்வம், செயலாளர் ஏ.என்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி வரவேற்றார்.
கல்லூரியின் நிறுவனத் தலைவர் நினைவு பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்து பாராட்டி,. இது போன்ற சாதனைகளை மாணவர்கள் தொடர்ந்து பெற வேண்டும் என்று வாழ்த்தினார். பின்னர் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்து இனிப்புகள் வழங்கினார். கல்லூரியின் இருபால் பேராசிரியர்களும் மாணவ- மாணவிகளை வாழ்த்தி பேசினர். முடிவில் வணிக நிர்வாகவியல் துறை தலைவர் கே.வி.சிவகுமார் நன்றி கூறினார்.