பஸ்நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா?
வத்திராயிருப்பு பஸ்நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு பஸ்நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
பஸ்நிலையம்
வத்திராயிருப்பு பஸ்நிலையம் திறக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகியும் இன்னும் முழுமையாக செயல்படாமல் உள்ளது. ஒரு சில பஸ்கள் தவிர மற்ற பஸ்கள் பஸ்நிலையத்திற்குள் செல்வதில்லை. இதனால் பஸ்நிலையத்தில் உள்ள கடைகளில் வியாபாரம் எதுவும் நடைபெறவில்லை என வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
பஸ்நிலையத்திற்குள் பராமரிப்பு இல்லாதால் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் பஸ்நிலையத்திற்குள் உள்ள மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை மூடிக்கிடப்பதுடன் புதர்மண்டிக்கிடக்கிறது.
அடிப்படை வசதி
பஸ்நிலையத்தில் உள்ள குடிநீர் தொட்டி பயன்பாடின்றி உள்ளது. அதேபோல பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை பூட்டி கிடக்கிறது. பஸ்நிலையத்திற்குள் மேற்கூரை சேதமடைந்து உள்ளது. இவ்வாறு அடிப்படை வசதிகள் எதுவும் வத்திராயிருப்பு பஸ்நிலையத்தில் இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர். பஸ்நிலையத்திற்குள் பஸ்கள் செல்லாததால் தற்போது தனியார் வேன்கள் மற்றும் கார்கள் நிற்கும் இடமாக மாறியுள்ளது.
ஆதலால் அனைத்து பஸ்களும் பஸ்நிலையத்திற்குள் சென்று வரவும், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து தரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.