பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் வரவேற்பை பெறுகிறதா?


பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் வரவேற்பை பெறுகிறதா?
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் வரவேற்பை பெறுகிறதா? என்று வாகன பிரியர்கள் கருத்து தொிவித்துள்ளனா்.

விழுப்புரம்

கால்நடையாக பயணம் செய்து வந்த மனிதர்கள், கால்நடைகளை பயணத்திற்கு பயன்படுத்த தொடங்கிய பிறகுதான் வாகனங்கள் உருவாகத்தொடங்கின. மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் அதிகமாக போக்குவரத்துக்கு பயன்பட்ட காலங்களில் நமக்கு பயணத்தூரமும், பயணச்செலவும் குறைவாகவே இருந்தன. மிஞ்சினால் ஒருநாளில் ஐந்தோ, பத்தோ கிலோ மீட்டர் தூரம்தான் பயணம் இருக்கும். கொஞ்சம் புல்லும், கொள்ளும், புண்ணாக்கும் மட்டுமே செலவாக இருக்கும். மாடு, குதிரைகளின் கழிவுகளில் பக்கவிளைவுகள் இல்லை. பயன்கள் மட்டுமே இருந்தன. வாகனங்களில் என்று எந்திரம் நுழைந்ததோ அன்று, பயணதூரமும் அதிகமானது. பெட்ரோல், டீசல், கியாஸ் என்று பயணச்செலவும் அதிகமாக உயர்ந்தது. சுற்றுச்சூழலை கெடுக்கும் பக்கவிளைவுகளும் அதிகமானது.

பேட்டரி வாகனங்கள்

இன்றைய காலக்கட்டத்தில் நாம் பயணத்தையோ, பயண தூரத்தையோ குறைக்க முடியாது. பயணச்செலவையும், பக்க விளைவுகளையும் கொஞ்சம் குறைக்க முயற்சி செய்யலாம். அதற்கு வசதியாக வந்து இருப்பதுதான் பேட்டரிகளில் இயங்கும் வாகனங்கள், பொது போக்குவரத்துகளை நாடி, தேடிச்சென்ற மக்கள், இப்போது நினைத்த நேரத்தில் பயணப்பட்டு செல்லும் வகையில், சொந்தமாக வாகனங்களை வாங்கி வைத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இருசக்கரம் அல்லது நான்கு சக்கர வாகனங்கள் இல்லாத வீடுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு வாகனம் ஒவ்வொரு குடும்பத்திலும் ஓர் அங்கமாகிவிட்டது.

எரிபொருள் விலை

வாகன எரிபொருட்களான பெட்ரோல், டீசல் விலை கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் தொடர்ந்து ஏற்றம் கண்டதால், புதிய வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தது. அந்த எரிபொருட்களுக்கு மாற்றாக, நவீன நாகரீக சூழலுக்கு ஏற்றவகையில் சந்தைக்கு வந்திருக்கும் மின்சார வாகனங்கள் மேல் தற்போது பலர் கவனம் திரும்பி இருக்கிறது.

விலை அதிகம் என்பதால், ஆரம்பத்தில் அதற்கு மக்கள் மத்தியில் மவுசு இல்லாவிட்டாலும், எரிபொருள் விலை ஏற்றம், மாசு இல்லை, செலவு குறைவு, அரசு மானியம் போன்ற காரணிகளை கருத்தில்கொண்டு, மக்கள் பார்வை அதன்மேல் விழத்தொடங்கி இருக்கிறது. அதன் காரணமாக, ஆட்டோ மொபைல் துறையில் இருக்கும் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் வாகனங்கள் உற்பத்தியை சற்றுக்குறைத்ததோடு, மின்சார வாகனங்களின் உற்பத்தியில் ஆர்வம் காட்டத்தொடங்கி இருக்கின்றன. இடையில் ஆங்காங்கே சில மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தினாலும், அது தற்போது மறைந்து, மீண்டும் விற்பனை அதிகரித்திருப்பதை புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

வசதியாக இருக்கிறதா?

பேட்டரி விலை அதிகமாக இருக்கிறது, சார்ஜிங் வசதி போதுமான இடங்களில் இல்லை போன்ற சில குறைகள் கூறப்பட்டாலும், மின்சார வாகனங்கள் எதிர்கால மாற்றத்தின் கட்டாயம் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறோம். நகரங்களில் சில அடுக்குமாடி குடியிருப்புகளில் சார்ஜிங் வசதி செய்யப்பட்டு வருகிறது. பொது இடங்களிலும் இனி அதற்கான வசதிகள் வர வாய்ப்பு இருக்கிறது.

தற்போது மின்சார வாகனங்கள் மக்களின் பயன்பாட்டில் எந்த அளவுக்கு இருக்கிறது? எந்த வகையில் வசதியாக இருக்கிறது? அதன் சாதக பாதகம் என்ன? என்பது பற்றி பல்வேறு தரப்பினரின் கருத்துகள் வருமாறு:-

பராமரிப்பு செலவு மிச்சம்

விழுப்புரம் கே.கே. சாலையை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் அஷ்ரப்:-

நான் கடந்த ஓராண்டாக பேட்டரியால் இயங்கக்கூடிய இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி வருகிறேன். நான் வேலை விஷயமாக நாள் ஒன்றுக்கு 30 கிலோமீட்டர் வரை வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதற்கு சாதாரண இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதென்றால் தினமும் 100 ரூபாய் வேண்டும். பேட்டரி வாகனம் வாங்கிய பிறகு பெட்ரோல் பங்க்கிற்கு சென்று பெட்ரோல் போடுவதற்கு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தி கொடுக்கும் இந்த வாகனம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 முதல் 90 கி.மீ. வரை செல்ல முடியும். நான் வெகுதூரம் சென்றாலும் பேட்டரியில் சார்ஜ் இறங்கினால் எத்தனை சதவீத சார்ஜ் உள்ளது, இன்னும் எத்தனை கிலோமீட்டர் வரை பயணிக்கலாம் என்ற விவரத்தை அறிய முடிகிறது. இந்த வாகனத்தில் செல்வதால் வழியில் ஸ்டார்ட்டிங் டிரபிள் போன்ற எந்த ஒரு பிரச்சினையும் இல்லை, அதுபோல் என்ஜின் ஆயில், பிரேக் ஆயில் எதையும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இந்த பேட்டரி வாகனத்தை முறையாக பயன்படுத்தி பராமரித்தால் எந்த பிரச்சினையும் இருக்காது, வீண் செலவும் ஏற்படாது. பேட்டரியில் சார்ஜ் குறைந்து 20 சதவீதம் முதல் 30 சதவீதமாக இருந்தால் மட்டுமே சார்ஜ் போடலாம். பலர் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் சார்ஜ் குறைந்துவிட்டாலே உடனடியாக சார்ஜ் போடுகின்றனர். அவ்வாறு சார்ஜ் போடுவதை தவிர்த்தால் பேட்டரி நீண்ட காலம் உழைக்கும். இந்த வாகனத்தை வாங்கி ஓராண்டு காலத்தில் எனக்கு எந்தவொரு வீண் செலவும் ஏற்படவில்லை. இந்த வாகனத்தின் மூலம் ஓராண்டு காலத்தில் பெட்ரோல் செலவு, என்ஜின் ஆயில், பிரேக் ஆயில் மாற்றுவது போன்ற வாகன பராமரிப்பு செலவு என சுமார் ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை எனக்கு மிச்சமாகி உள்ளது. பேட்டரி வாகனத்தை முறையாக பயன்படுத்தினால் அனைவருக்குமே மிகச்சிறந்த முறையில் கைகொடுக்கும்.

வேகமாக செல்ல முடியாது

திண்டிவனத்தை சேர்ந்த ரவிச்சந்திரன்:-

நான் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக மின்சார வாகனத்தை ரூ.1 லட்சம் கொடுத்து வாங்கினேன். தற்போது வரை எந்தவொரு பழுதும் இன்றி நன்றாக இயங்குகிறது. இரவில் 3 மணி நேரம் சார்ஜ் போடுவேன், அவ்வாறு 3 மணி நேரம் சார்ஜ் போட்டால் 80 கிலோ மீட்டர் வரை செல்லலாம். வேகம் 40 கிலோமீட்டர் வரை செல்லலாம். சுற்றுப்புற சூழலுக்கு மாசுபடாமல், சத்தமின்றி செல்வதால் மின்சார வாகன பயன்பாட்டை பலரும் விரும்புகிறார்கள். மேலும் அதிக எடையும் இல்லாமல் வசதியாக செல்லும்படி உள்ளதால் உள்ளூரில் பயன்படுத்துவதற்கு ஏற்ற வாகனமாக உள்ளது. பெட்ரோல் செலவு மிச்சமாகும், சீட்டுக்கு அடியில் பேட்டரி வைத்துள்ளதால் சுமைகளை அங்கு வைக்க முடியாது. ஆனால் சுமைகளை வைக்க இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. மின்சார வாகனத்தில் உள்ள குறை என்னவென்றால் வேகமாக செல்ல முடியாது. சார்ஜ் குறைய, குறைய வேகம் குறையும். இதனால் குறிப்பிட்ட நேரத்துக்கு வேகமாக செல்ல முடியாது. பேட்டரி 3 வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டியது இருக்கும். இதன் செலவு சற்று கூடுதலாக உள்ளது. மற்றபடி சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற வாகனமாகும்.

வசதியானது

மேல்மலையனூர் அருகே மேல்தாங்கல்புரவடை கிராமத்தை சேர்ந்த திருப்பாவை:-

நானும் என் கணவரும் பயன்படுத்தி வருவது பேட்டரியால் இயங்கக்கூடிய மோட்டார் சைக்கிள். இது முழுக்க, முழுக்க நம் தமிழக தொழில்நுட்பத்தில் செய்யப்பட்டுள்ளது. 6 மணி நேரம் சார்ஜ் செய்தவுடன் தானாகவே நின்றுவிடும். பேட்டரிக்கு 6 வருடம் வாரண்டி கொடுத்துள்ளார்கள். பெட்ரோல் வாகனங்களை காட்டிலும் இது மிகவும் வசதியானது. மேலும் மாசு இல்லாதது. பெட்ரோல் வாகனங்களை அனைத்து தரப்பினரும் வாங்கும் அளவுக்கு விலை உள்ளதுபோல் இந்த வாகனத்தின் விலையும் குறைவாக இருந்தால் அனைவரும் வாங்கும் நிலை ஏற்படும். இதனால் காற்று மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனைத்தும் மாசு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

செலவுகள் குறைவு

கள்ளக்குறிச்சி ஸ்ரீ ஹர்ஷிதா எலக்ட்ரிக் பைக் ஷோரூம் உரிமையாளர் மாதவன்:-

தற்பொழுது பேட்டரியால் இயங்கும் இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பெரும்பாலான இல்லத்தரசிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் பேட்டரியால் இயங்கும் இரு சக்கரவாகனங்களையே அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களுக்கு பெட்ரோல் செலவு மிச்சமாகிறது. அதேபோல் உணவு டெலிவரி செய்யும் நபர்கள் எலக்ட்ரிக் வாகனங்கள் மூலம் டெலிவரி செய்வதால் அவர்களுக்கு செலவுகள் குறைவாக உள்ளது. இந்த ஆண்டு(2023) முதல் மத்திய அரசு பேட்டரி தயாரிப்பு நிறுவனங்களிடம் மிகவும் கட்டாயமாக எரியும் தன்மையற்ற பேட்டரிகளை உற்பத்தி செய்து அதற்கான சான்றிதழை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. இதனால் பொதுமக்களிடம் இது பற்றிய எந்த வித அச்சமும் தேவையில்லை. நீங்கள் 10 ரூபாயில் 100 கிலோமீட்டர் தூரம் வரை இந்த வாகனத்தில் பயணிக்கலாம். இதுவே 100 ரூபாய் பெட்ரோல் பயன்படுத்தி இருசக்கர வாகனங்களை ஓட்டினால் 40 முதல் 50 கிலோமீட்டர் தூரம் வரை தான் செல்ல முடியும். நீங்கள் பெட்ரோல் போடும் காசிலேயே இ.எம்.ஐ. செலுத்தி இருசக்கர வாகனங்களை உங்களுக்கு சொந்தமாக்கி கொள்ளலாம்.

பொதுமக்களிடம் வரவேற்பு

தியாகதுருகத்தை சேர்ந்த மோட்டார் சைக்கிள் மெக்கானிக் பழனி:-

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் சிறு வியாபாரிகள் ஆகியோர் பேட்டரியால் இயங்கும் இருசக்கர வாகனங்களையே பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பேட்டரி வாகனங்களை இயக்கும்போது புகை வெளியே வராததால் சுற்றுச்சூழல் பாதுகாப்பாக இருக்கும். இருப்பினும் பேட்டரி வாகனங்களில் நீண்ட தூரம் செல்ல முடியாத நிலை மற்றும் சில நேரங்களில் வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. தரமில்லாத பேட்டரிகள்தான் இது போன்ற விபத்துகளுக்கு காரணம் என கூறப்படுகிறது. எனவே இவ்வாறான குறைகளை ஆராய்ந்து அவற்றை நிவர்த்தி செய்து பேட்டரி வாகனங்கள் விற்பனைக்கு வரும் நிலையில் பேட்டரி வாகனங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். தற்போதைய நிலையில் பேட்டரி வாகனங்கள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story