கல்லூரி பேராசிரியர்களுக்கு மேல் அங்கி அவசியமா?


கல்லூரி பேராசிரியர்களுக்கு மேல் அங்கி அவசியமா?
x

டாக்டர்கள், வக்கீல்களை போல கல்லூரி பேராசிரியர்களுக்கு மேல் அங்கி அவசியமா? என்று திண்டுக்கல் மாவட்ட மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்

தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது பள்ளிக்கூட மாணவர்களுக்கு சீருடை திட்டத்தை கொண்டு வந்தார். மாணவர்களிடம் சமத்துவ உணர்வு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

தற்போது தனியார் கல்வி நிறுவனங்களின் வருகையால் அத்திட்டம், பலவித பரிணாமங்களைப் பெற்று நடைமுறையில் இருக்கிறது.

ஆடை கட்டுப்பாடு

பல வர்த்தக நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றிலும் சீருடை முறை பின்பற்றப்படுகிறது.

தங்கள் நிறுவனப் பணியாளர்களை அடையாளப்படுத்துவதற்காக இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

அதுபோல் டாக்டர்கள் வெள்ளை நிறத்திலும், வக்கீல்கள் கறுப்பு நிறத்திலும் கோட்டு அணிவதும் அதற்காகத்தான்.

சில கல்வி நிறுவனங்களில் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு ஆடைக்கட்டுப்பாடு தொடர்ந்து வருகிறது. சிலநேரங்களில் இதனால் சர்ச்சைகளும் எழுந்துவருகின்றன.

ஜன்னல் வைத்த ஜாக்கெட்

2008-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆடைக் கட்டுப்பாட்டில் சில உத்தரவுகளை பேராசிரியர்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டனர்.

2009-ம் ஆண்டு பள்ளி ஆசிரியைகள் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டோ, மெல்லிய உடைகளோ அணிந்து வர தடைவிதிக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகின.

2018-ல் ஒடிசா மாநில பள்ளி ஆசிரியைகள் கைத்தறி சேலை அணிந்துவரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2021-ம் ஆண்டில் கேரளாவில் கல்வி நிலையங்களில் பணியாற்றும் ஆசிரியைகள், பேராசிரியைகள் சேலை அணிந்துவர கட்டாயப்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதன்பின்னர், கேரள கல்வித்துறை அமைச்சகம் ஆடை அணிவதில் கட்டுப்பாடில்லை என்று கூறி அந்த புகாருக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

மேல் அங்கி அணிய வேண்டும்

தற்போது தமிழக உயர்கல்வித் துறைக்கு, வந்த ஒரு புகார் மனு அடிப்படையில், அனைத்து பல்கலைக்கழக பதிவாளர், கல்லூரிக்கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்துக்கு ஆடைக் கட்டுப்பாடு குறித்த ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.

அதில், 'கல்லூரிகளில் பேராசிரியர்கள் அனைவரும் தங்களை மாணவர்களிடம் இருந்து தனியாக வேறுபடுத்தி காட்டும் விதமாகவும், உடல் அமைப்பை மறைக்கும் விதமாகவும் 'மேல் அங்கி' (ஓவர் கோட்) அணிய வேண்டும். மேலும் பேராசிரியர்களுக்குள் ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும். இதற்கு அந்தந்த நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

உயர்கல்வித் துறையின் இந்த சுற்றறிக்கை உத்தரவா? அல்லது யோசனையா? புகார் மீதான நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து இருக்கிறதா? என்பது எல்லாம் புரியாத புதிராக இருக்கின்றன. அதை உயர்கல்வித்துறை தெளிவுப்படுத்த வேண்டும்.

இருப்பினும், உயர்கல்வித்துறை கூறி இருப்பது போல, கல்லூரி பேராசிரியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு என்பது அவசியமானதா?, அதை நடைமுறைப்படுத்துவது சரியாக இருக்குமா? என்பது குறித்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பேராசிரியர்கள், ஓய்வுபெற்ற பேராசிரியர், சமூக ஆர்வலர் கூறிய கருத்துகள் விவரம் வருமாறு:-

ஆடை கட்டுப்பாடு அவசியம்

பொருளாதாரத்துறை பேராசிரியர் தங்க ரவிசங்கர் (பழனி) :- இன்றைய சூழலில் கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அவசியமான ஒன்று தான். அறிவு சார்ந்த கற்றலோடு, சமூகம் சார்ந்த நெறிமுறைகள், சவால்கள் நிறைந்த சமூகத்தில் வெற்றிபெற போராடும் மாணவர்களுக்கு, பேராசிரியர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டியது அவசியம். இதற்காக பேராசிரியர்கள் ஆடை அணிவதில் நெறிமுறைகளை அமைத்து கொள்வதும் மிகவும் முக்கியம். மேல்அங்கி (கோட்) அணிவதால் மாணவர்கள் மத்தியில் பேராசிரியர்களுக்கு ஒரு மரியாதை ஏற்படும்.

ஓய்வுபெற்ற தமிழ் பேராசிரியர் ஞானசேகரன் (வத்தலக்குண்டு) :- பேராசிரியர்கள் பண்பு, நடத்தைகளின் மூலம் மாணவர்களின் மனம் கவர்ந்த ரோல்மாடலாக மாறுகின்றனர். அந்த பேராசிரியரின் மாணவர் என்று சொல்லி அதற்கேற்ப ஆடைகள், பழக்கவழக்கங்களை மேற்கொள்ளும் நிறைய மாணவர்களை நான் பார்த்து இருக்கிறேன். பெரும்பாலான மாணவர்கள் தங்களது பேராசிரியர்களின் தாக்கத்தை விரும்பி ஏற்கின்றனர். எனவே பேராசிரியர்கள் நாகரீகமாக உடை அணிவது வரவேற்கத்தக்கது. அது கட்டாயமும் ஆகும்.

சமூக ஆர்வலர் சவுந்தரராஜன் (கம்பிளியம்பட்டி) :- கல்லூரி பேராசிரியர்கள் மேல்அங்கி அணிய வேண்டும் என்பது நல்ல விதி. ஏற்கனவே வக்கீல்கள், மருத்துவர்கள் மேல்அங்கி அணியும் நடைமுறை உள்ளது. அதேபோல் அரசு, தனியார் கல்லூரி பேராசிரியர்கள் என அனைவருக்கும் ஒரே நிறத்தில் மேல்அங்கி அணிந்தால் அது அடையாளமாக மாறிவிடும். கல்லூரி மாணவ-மாணவர்கள் மனதிலும் பேராசிரியர்கள் மீது மரியாதையை ஏற்படுத்தும்.

மகளிர் கல்லூரியில் மட்டும்...

வேதியியல் துறை பேராசிரியை சினேகலதா (திண்டுக்கல்) :- இருபாலர் படிக்கும் கல்லூரிகளில் பேராசிரியைகள் மேல்அங்கி அணிந்து வருவது சவுகரியமானது. எனவே அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மகளிர் கல்லூரியில் பேராசிரியைகள் மேல்அங்கி அணிவது தேவையற்றது. மேல்அங்கி அணிவது மேற்கத்திய கலாசாரத்தை சேர்ந்தது. மேலைநாடுகளின் தட்பவெப்ப நிலை வேறு. நமது நாட்டின் தட்பவெட்ப நிலை வேறு. கல்லூரிக்கு பணிக்கு வந்தால் 8 மணி நேரம் மேல்அங்கி அணிய வேண்டும். ஆனால் கோடைகாலத்தில் தட்பவெப்ப நிலையை தாங்கி கொள்ள முடியாது. எனவே நமது நாட்டு கலாசாரம், தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மேல்அங்கி தேவையில்லை.

பேராசிரியர்களுக்கு அடையாளம்

கணினி அறிவியல் துறை பேராசிரியர் கிருபாகரன் (திண்டுக்கல்) :- கல்லூரியில் பேராசிரியர்கள், பேராசிரியைகள் மேல் அங்கி அணிவது நல்ல விஷயம் தான். கல்லூரி வளாகம் மட்டுமின்றி பொது இடத்தில் நின்றால் கூட பேராசிரியர்கள் என அடையாளம் தெரிந்துவிடும். இதன்மூலம் பேராசிரியர்கள் மீதான மரியாதை அதிகரிக்கும். ஆனால் மேல்அங்கியை அணிய சொல்வதால், பேராசிரியர்களுக்கு சீருடையா? என நினைத்து விடக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடந்த 2015-ல் அரசு பள்ளியில் ஆசிரியைகள் மேல் அங்கி அணிய வேண்டும் என்ற உத்தரவு வந்தது. அதன்படி, மதுரை பேரையூர் தாலுகாவில் உள்ள வன்னிவேலம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மேல் அங்கி அணிந்து வருவது அப்போது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் அது காலப்போக்கில் மாறியது.

அதேபோல், தற்போது உயர்கல்வித் துறையின் சுற்றறிக்கையில் குறிப்பிட்டது போன்ற ஆடைக் கட்டுப்பாடு நடைமுறைக்கு வருமா? அல்லது அது வெறும் சுற்றறிக்கையாகவே போய்விடுமா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.


Next Story