பாலூட்டும்அறைகள் முழுவீச்சில் செயல்படுமா?
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பாலூட்டும்அறைகள் முழுவீச்சில் செயல்படுமா? என தாய்மார்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பஸ்நிலையங்களில், பாலூட்டும் அறைகள் முழுவீச்சில் செயல்படுமா? என தாய்மார்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பாலூட்ட சிரமம்
அவசர உலகில் மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு வேகமாக பயணிக்கும் சூழ்நிலையால் பொது மக்களின் நகர்வு இருந்து கொண்டே இருக்கிறது. பஸ் மற்றும் ரெயில்களில் அதிவிரைவு பயணங்களை மேற்கொள்கிறார்கள்.
அவ்வாறு செல்லும்போது குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கும் பாதுகாப்பான பயணம் அவசியம் ஆகிறது. தாய்மார்கள் பஸ் நிலையங்களில் நிற்கும்போது குழந்தை பசியோடு அழுதால் அதற்கு பாலூட்டுவது பெண்களுக்கு சிரமமாக இருந்தது. ஏனென்றால் பஸ் நிலைய வளாகம் முழுவதிலும் பல்வேறு தரப்பு மக்கள் குழுமி நிற்பார்கள். இதுதவிர குற்றங்களை தடுக்கவும்-கட்டுப்படுத்தும் வகையிலும் அனைத்து பஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதை அறிந்த பெண்கள் பஸ்நிலையங்களில் அமர்ந்து குழந்தைக்கு பாலூட்ட சிரமப்பட்டனர்.
சிறந்த திட்டம்
இதை சிந்தித்த தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த சிறந்த திட்டம் தாய்மார்கள் பாலூட்டும் அறை ஆகும். அவரது உத்தரவுப்படி பஸ் நிலையங்கள்தோறும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு வசதியாக, சிறப்பு அறைகள் அமைத்து கொடுக்கப்பட்டன.
அதன்படி நெல்லையில் சந்திப்பு, பாளையங்கோட்டை மற்றும் புதிய பஸ் நிலையங்கள் என 3 இடங்களில் பாலூட்டும் அறைகள் அமைத்து கொடுக்கப்பட்டன. இவை தாய்மார்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
பாளையங்கோட்டை பஸ் நிலையம்
இதில் தற்போது நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் இடிக்கப்பட்டு, புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றாக செயல்படும் பொருட்காட்சி திடல் பஸ் நிலையத்தில் பாலூட்டும் அறை இல்லை.
பாளையங்கோட்டை பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதை பயன்படுத்த முடியாமல் பூட்டி வைத்துள்ளனர். இதனால் பாளையங்கோட்டை பஸ் நிலையத்துக்கு வருகிற தாய்மார்கள் சிரமப்படுகிறார்கள்.
நெல்லை புதிய பஸ் நிலையத்தில், குழந்தைகளுக்கு பாலூட்ட வசதியாக கூடுதலாக அறைகள் அமைக்க வேண்டும், என தாய்மார்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பெண்கள் வலியுறுத்தல்
இதுகுறித்து ஜீவிதா என்பவர் கூறுகையில், ''பஸ் நிலையங்களில் பாலூட்டும் அறை அமைத்திருப்பது பயனுள்ளதாக இருக்கிறது. நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பிளாட்பாரங்கள் தோறும் இதுபோன்ற அறைகள் அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும். குறிப்பாக சென்னை உள்ளிட்ட அதிக தூர பஸ்கள் புறப்படும் பிளாட்பாரத்தில் அமைக்க வேண்டும்'' என்றார்.
பூ வியாபாரி கலா என்பவர் கூறுகையில், ''நான் இங்கு பூ கட்டி விற்பனை செய்து வருகிறேன். காலை நேரத்தில் வந்து இந்த அறையை திறந்து வைப்பார்கள். இந்த அறையை தாய்மார்கள் முழுமையாக பயன்படுத்துகிறார்கள். ஒரு சில பெண்கள் ஆடையை சரி செய்வதற்கும் இந்த அறையை பயன்படுத்துகிறார்கள். மாநகராட்சி ஊழியர்கள் இந்த அறையை நன்றாக பராமரித்து வருகிறார்கள். இரவு நேரத்தில் எதிரே உள்ள பொருட்கள் பாதுகாப்பு அறையில் இதனுடைய சாவி இருக்கும். தேவைப்படுவோர் சாவியை வாங்கி திறந்து பயன்படுத்தலாம். அதற்கான அறிவிப்பும் கதவில் ஒட்டி வைத்துள்ளனர்'' என்றார்.
தூத்துக்குடி
இதேபோல் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் ஆகிய 2 பஸ் நிலையங்கள் உள்ளன. இந்த பஸ் நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்கள் வசதிக்காக தனி அறை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.
இந்த நிலையில் பழைய பஸ் நிலையம் மேம்படுத்தும் பணிகள் நடப்பதால், அந்த அறை அகற்றப்பட்டு விட்டது. அதே நேரத்தில் தற்காலிக பஸ் நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கான எந்த அறையும் அமைக்கப்படவில்லை. புதிய பஸ் நிலையத்தில் அமைந்து உள்ள அறையும் பொதுமக்கள் உபயோகம் இன்றி காணப்படுகிறது. அதனை கொரோனா தடுப்பு பணியாளர்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
திறக்க வேண்டும்
இதுகுறித்து தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த பாண்டிமுனீசுவரி கூறும்போது, பாலூட்டும் தாய்மார்கள் பஸ் நிலையங்களுக்கு செல்லும்போது, குழந்தைகள் அழுதால் அந்த குழந்தைக்கு பாலூட்டுவதற்காக மறைவான இடத்தை தேடி அலைய வேண்டிய நிலை இருக்கிறது. ஒரு தர்மசங்கடமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் பாலூட்டும் தாய்மார்களின் தவிப்பை அறிந்து, ஒவ்வொரு பஸ் நிலையங்களிலும் பாலூட்டும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்காக தனியாக அறை அமைக்கப்பட்டது. தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்திலும் அது போன்ற அறை அமைந்து உள்ளது. ஆனால் தற்போது அந்த பாலூட்டும் அறையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் மூடப்பட்டு இருக்கிறது.
பாலூட்டும் தாய்மார்களுக்கான அறையை கண்டிப்பாக திறக்க வேண்டும். இது மிகவும் வசதியாக இருந்தது. பச்சிளம் குழந்தைகளை கொண்டு சென்று பால் கொடுப்பதால் அந்த அறை சுத்தமாகவும், காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும். பாதுகாப்பான பகுதியாகவும் இருக்க வேண்டும். அந்த பகுதியில் போலீஸ் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும், என்று கூறினார்.
தென்காசி
தென்காசியில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கு வசதியாக அறைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. தற்போது பழைய பஸ் நிலையத்தில் உள்ள அந்த அறை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. இதேபோன்று புதிய பஸ் நிலையத்தில் உள்ள அறையும் செயல்பாடு இல்லாமல் வேறு துறையில் உள்ளவர்கள் அதனை பயன்படுத்தி வருகிறார்கள். இவற்றை மீண்டும் முழுவீச்சில் இயங்க செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுபற்றி செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரையை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் கூறியதாவது:-
நான் காலாங்கரையில் குடியிருந்து வருகிறேன். எனது கணவர் சங்கர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். எனக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நான் வெளியூர் செல்வதற்காக தென்காசி பஸ் நிலையத்திற்கு வந்தேன். எனது குழந்தைக்கு பால் ஊட்டுவதற்காக அந்த அறையை தேடினேன். ஆனால் அது அடைக்கப்பட்டு இருந்தது. குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியமான ஒன்று. எனது குழந்தை அழுதது. எங்கு சென்று பால் கொடுப்பது என்று எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இது போன்ற நல்ல விஷயங்களை அரசு உடனடியாக கவனித்து இந்த அறைகளை திறந்து வைத்தால் என் போன்ற தாய்மார்களுக்கு பேருதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தாய்மார்கள் எதிர்பார்ப்பு
எனவே நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பஸ் நிலையங்களில் உள்ள பாலூட்டும் அறைகள் முழுவீச்சில் செயல்படுமா? என தாய்மார்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.