மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?


மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?
x

மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அரியலூர்

பொதுமக்கள் தரும் மனுக்கள் வெறும் காகிதம் அல்ல. அவர்களின் வாழ்க்கை. எனவே அதிகாரிகள் அந்த மனுக்களை மனிதாபிமானத்துடன் பரிசீலித்து அவர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகள் கூட்டத்தில் அறிவுறுத்தி உள்ளார்.

இந்த அறிவுறுத்தல் முதல் முறையாக வழங்கப்பட்டது அல்ல. அவர் பலமுறை அதிகாரிகளுடன் பேசும்போதெல்லாம் இதை வலியுறுத்தி வருகிறார். அவரும் போகுமிடமெல்லாம் பொதுமக்கள் கூடிநிற்கும் இடத்தில் அவர்களை சந்தித்து மனுக்களை பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

பொதுமக்களின் மனுக்கள்

இந்நிலையில் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் வாரந்தோறும் திங்கட்கிழமையன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடக்கிறது. இந்த முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படுகிறது. மனு அளிக்க வருபவர்களின் செல்போன் எண், வீட்டு முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் தவறாமல் பெறப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. இதைத்தவிர முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கும், முதல்-அமைச்சர் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்யும்போது, பொதுமக்கள் அளிக்கும் மனுக்களும் தொடர் நடவடிக்கைக்காக அந்தந்த மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்துகிறது. ஆனால் இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏனென்றால் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வருபவர்களில் சிலர் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவதை கேட்க முடிகிறது. அவ்வப்போது மண்எண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்யும் சம்பவங்களும் அரங்கேறுகிறது.

ஆய்வு செய்ய வேண்டும்

இதனால் திங்கட்கிழமை குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்போதெல்லாம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் பொதுமக்களை சோதனை செய்து தான் அனுப்புவார்கள். இதேபோல் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமும் கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் முன்வைக்கும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி குறிப்பெடுத்து அரசு நடவடிக்கைக்காக அனுப்பி வைப்பார்கள்.

ேமலும் ஓய்வூதியர் குறை தீர்க்கும் முகாம், பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் என பொதுமக்களிடம் மனுக்கள் பெறுவதற்காக ஏற்பாடுகள் குறைவில்லாமல் நடைபெற்று வருகிறது. ஆனால் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் எந்த அளவுக்கு மனுதாரர்களுக்கு பயன் அளிக்கிறது என்பதை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.

போலீஸ் நிலையங்களில்...

இதேபோல் போலீஸ் நிலையங்களில் பொதுமக்களின் புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்ய மறுப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. பொதுமக்கள் மனு மீது நடவடிக்கை எடுக்க ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் வரவேற்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆனாலும் போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்படும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், துணை போலீஸ் சூப்பிரண்டிடம் மனுக்கள் அளிக்கப்படுகிறது. அப்போதும் நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுக்கப்படுகிறது. பொதுமக்களின் மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இது குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

கனரக வாகனங்களுக்கு தனி சாலை

அரியலூரை சேர்ந்த சங்கர்:- அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்டு ஆலைகளுக்கு தினமும் ஏராளமான லாரிகள் வந்து செல்கின்றன. இதனால் அதிக அளவில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதை தடுக்க கனரக வாகனங்களுக்கு தனி சாலை அமைத்து, அந்த சாலையில் லாரிகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக பல ஆண்டுகளாக பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிறைவேறவில்லை. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூரில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தனி அலுவலகம், அதிக வசதி கொண்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு குடியிருப்பு பகுதிகள் இல்லை. பல்துறை அலுவலக வளாகத்தில் அரியலூர் நகர தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது வரை எந்த ஒரு பணியும் நடைபெறாமல் உள்ளது. இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டும், நடவடிக்கை இல்லை. இதுபோன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

நிறைவேறாத தடுப்பணை திட்டம்

தூத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி தங்க தர்மராஜன்:- கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அரியலூர் மாவட்டம், தூத்தூர் கிராமத்திற்கும், தஞ்சை மாவட்டம், வாழ்க்கை கிராமத்திற்கும் இடையே கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தும், அந்த திட்டம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மேலும் புள்ளம்பாடி வாய்க்கால் கடைமடை, சுக்கிரன் ஏரியின் பாசன வாய்க்கால்கள் மற்றும் வடிகால் வாய்க்கால் அனைத்திலும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, அளவை செய்து தூர்வார வேண்டும். மேலும் தூத்தூர் பெரிய ஏரியில் இருந்து செல்லும் சில முக்கிய பாசன வாய்க்கால்கள் இருந்த சுவடே இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்புகளும் இதுவரை அகற்றப்படவில்லை.

உடனடி நடவடிக்கை தேவை

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, சின்ன பரவாய் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மருதமுத்து:- எனக்கு ஊராட்சி சாா்பில் வீட்டில் கழிவறை கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து மனு கொடுத்து வருகிறேன். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது புதிய கலெக்டரிடம் இது தொடர்பாக மனு கொடுத்துள்ளேன். குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தால், பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும்.

தேவையற்ற பிரச்சினைகள்

குரும்பலூர் 3-வது வார்டை சேர்ந்த இளையராஜா:- எங்கள் பகுதியில் தனி நபர் ஒருவர் பொது இடத்தை ஆக்கிரமித்துள்ளார். இது தொடர்பாக கலெக்டரிடம் பொதுமக்கள் சார்பில் மனு கொடுத்துள்ளேன். மாவட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டால், அவர்கள் மனு கொடுக்க வருவது குறைந்து விடும். பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆனால், தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும்.

மனு கொடுத்தவுடன் சக்கர நாற்காலி

ஆலத்தூர் தாலுகா, அணைப்பாடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுப்ரமணி:- நான் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரை சந்தித்து எனக்கு சக்கர நாற்காலி தர வேண்டும் என்று மனு கொடுத்தேன். மனுவை வாங்கிய கலெக்டர் உடனடியாக தனக்கு சக்கர நாற்காலியை வழங்கினார். மனு கொடுத்த உடன் நடவடிக்கை எடுத்த கலெக்டருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


Next Story