பிளாஸ்டிக் பாட்டிலை சேகரித்து மறுசுழற்சிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா?
பிளாஸ்டிக் பாட்டிலை சேகரித்து மறுசுழற்சிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா?
அதிராம்பட்டினம் பகுதிகளில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து மறுசுழற்சிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள்
தமிழகத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை தடுக்கவும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளை குறைக்கவும், ஒருமுறை பயன்படுத்தி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை தவிர்ப்பதற்காக மஞ்சள்பை உள்ளிட்டவை அரசு வழங்கி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதிராம்பட்டினம் பகுதிகளில் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படு்்த்திவிட்டு சாலையோரம் மற்றும் வாய்க்கால்களில் வீசி விட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் நீர்நிலைகள், சாக்கடை கால்வாய்கள், கழிவு பொருட்களுடன் பிளாஸ்டிக் பாட்டில்கள் மிதப்பதுடன், அடைப்பும் ஏற்படுகிறது.
மறுசுழற்சிக்கு கொண்டு செல்ல
அதிராம்பட்டினம் பகுதியில் கடற்கரை ஓரங்களில் உப்பு உற்பத்தி செய்யும் வாய்க்கால்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிக அளவில் கிடக்கிறது. இதனால் வாய்க்காலில் வரும் கடல் நீர் மாசுபடுகிறது. அதிராம்பட்டினம் அலையாத்திக் காட்டிற்கு பறவை இனங்கள் உணவிற்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் பல்வேறு கண்டங்களில் இருந்து வான்வழியே பறந்து வருகின்றன. இவை கண்டம் விட்டு கண்டம் பறக்கும் போது கடல் வழியே கடந்து வருகிறது. அப்போது பறவைகள் கடல் கழிவுகளை உணவாக எடுத்துக்கொள்கின்றன. கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் பொருட்களால் பறவைகளுக்கு அழிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இதுபற்றி சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், பிளாஸ்டிக் கழிவு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அவற்றை சேகரித்து மறுசுழற்சிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்களிடம் விழி்ப்புணர்வு
மேலும் சுகாதார அதிகாரிகள் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்துக்கொண்டு வருபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதை அறிந்தால் பொதுமக்கள் ஆங்காங்கே தேஙகி கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்து கொடுத்து பணத்தை வாங்கிச் செல்லும் சூழ்நிலை ஏற்படும். இதனால் பிளாஸ்டிக் கழிவுகளை தடுக்க முடியும். எனவே பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.