ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்கப்படுகிறதா?
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்கப்படுகிறதா? என கலெக்டர் ஆய்வுசெய்தார்.
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சென்னையில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
இந்த பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ.1,000 ரேஷன் அட்டைதாரர்களுக்கு முறையாக வழங்கப்படுகிறதா என வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று காட்பாடி பகுதியில் திடீர் ஆய்வு செய்தார்.
காட்பாடி காந்திநகரில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு செய்தபோது 6 அடிக்கு குறைவாக இருந்த கரும்புகளை கடைக்குள் வைக்குமாறும், 6 அடி நீளம் உள்ள கரும்புகளையே வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். ஒரு சிலருக்கு பொங்கல் பரிசு தொகுப்பையும், ரொக்க பணத்தையும் கலெக்டர் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து கரசமங்கலம் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் வழங்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் சுய உதவி குழுக்களின் ஊராட்சி அளவிலான காளான் உற்பத்தி கரசமங்கலம் கிராமத்தில் நடக்கிறது. இந்த காளான் உற்பத்தியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, துணை மேயர் சுனில்குமார், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சிவசங்கரி பரமசிவம், சாமுண்டீஸ்வரி குணாளன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.