மாணவர்களுக்கு கட்டாய நீச்சல் பயிற்சி அளிக்கப்படுமா?


மாணவர்களுக்கு கட்டாய நீச்சல் பயிற்சி அளிக்கப்படுமா?
x
தினத்தந்தி 23 May 2023 12:15 AM IST (Updated: 23 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களுக்கு கட்டாய நீச்சல் பயிற்சி அளிக்கப்படுமா? என்று ஆசிரியர்கள்-அதிகாரிகள் கருத்து தொிவித்துள்ளனா்.

கடலூர்

பூமியில் பிறந்த மனிதன் உலகை மட்டுமின்றி பஞ்சபூதங்களையும் அடக்கி ஆளும் வல்லமை பெற்றவனாக திகழுகிறான். எனினும் சிலர் அந்த பஞ்ச பூதங்களுக்கு இரையாகும் துயரமும் தொடருகிறது.

'நீரின்றி அமையாது உலகு' என்பது வள்ளுவர் வாக்கு. அத்தகைய தண்ணீரை தேக்கிவைத்தும், ஆறு, கால்வாய்கள் வழியாகவும் விவசாயத்துக்கு கொண்டு செல்கிறோம். பூமியை தோண்டி கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்தும் பயன்படுத்துகிறோம்.

தண்ணீரில் நிகழும் உயிரிழப்புகள்

உள்ளூர்காரனுக்கு பேயை கண்டால் பயம், வெளியூர்காரனுக்கு தண்ணீரை கண்டால் பயம், ஆழம் தெரியாமல் காலை விடாதே போன்ற பழமொழிகள் தண்ணீரில் உள்ள ஆபத்தை எச்சரிக்கின்றன. எனினும் வெளியூர்களுக்கு செல்லும் இளைஞர்கள் அங்குள்ள நீர்நிலைகளை கண்டதும் குதூகலம் அடைகிறார்கள். நீச்சல் தெரியாவிட்டாலும், அதில் குளித்தே தீர வேண்டும் என்று ஆர்வம் ஏற்படுகிறது. நீச்சல் தெரிந்தவர் அழைக்கும்போது, நீச்சல் தெரியாதவரும் தண்ணீருக்குள் இருக்கும் ஆபத்தை உணராமல் உள்ளே இறங்கி உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலும் தென்பெண்ணையாறு, வெள்ளாறு, கொள்ளிடம், வீராணம் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கும் வெளியூர் நபர்கள் மற்றும் சிறுவர்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. இதை தடுக்க நீர்நிலைகளின் கரையில் ஆபத்தான பகுதி, ஆழமான பகுதி, இங்கு குளிக்கத்தடை என்று எச்சரிக்கை பலகைகள் அமைத்துள்ளனர். ஆனாலும் அதையும் மீறி, கரையில் நின்று குளிக்க சென்று, ஆழமான பகுதிக்கு நகரும்போது காலனின் பிடியில் சிக்கிக்கொள்கிறார்கள்.

கடந்த ஆண்டில் 30 பேர் பலி

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் நீர்நிலைகளில் மூழ்கி 30-க்கும் மேற்பட்டோர் இறந்து உள்ளனர். இதில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 4-ந் தேதி கடலூர் அருகே உள்ள ஏ.குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த 7 பெண்கள் கெடிலம் ஆற்றில் மூழ்கி பலியானதும் அடங்கும். இந்த ஆண்டில் இதுவரை 10-க்கும் அதிகமானோர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர்.

இதேபோல் நீண்ட கடற்கரையை தன்னகத்தே கொண்டுள்ள கடலூர் சில்வர் பீச்சிலும் குளிக்க செல்லும் மாணவர்கள் அலையில் சிக்கி உயிரிழப்பது தொடர் கதையாக நடக்கிறது. தற்போது கோடைகாலங்களில் பெரும்பாலான குளங்களில் குறைந்த அளவு தண்ணீரே கிடக்கிறது.

இதுபோன்ற குளங்கள், ஆறு, கடல் பகுதியில் சிறுவர்கள் ஆர்வத்துடன் விளையாடி மகிழ்கின்றனர். அப்போது நீச்சல் தெரியாமல் சிறுவர்கள், இளைஞர்கள் மூழ்கி இறக்கும் துயரமும் நிலவுகிறது.

நீச்சல் பயிற்சி

கோடை விடுமுறையில் ஒவ்வொரு நாளும் குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் நெஞ்சை நொறுங்க செய்கிறது. இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க அனைவரும் நீச்சல் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். சில நாடுகளில் ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது போன்று நீச்சல் பயிற்சியும் கட்டாயம் என்று கொண்டு வருவது நன்மை பயக்கும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. குறிப்பாக மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள், நீச்சல் ஆர்வலர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

நீச்சல் கற்க தடை

நந்திமங்களத்தை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர் உலகநாதன்:- முன்பு உள்ள காலத்தில் சிறுவர்களுக்கு 5 வயதானாலே பெற்றோர் கிணறு அல்லது குளத்தில் கயிறு கட்டி நீச்சல் பழகி கொடுப்பர். இதனால் கடந்த காலங்களில் நீச்சல் தெரியாத பிள்ளைகளே இல்லை எனலாம். பெண் பிள்ளைகளும் அதிகளவில் நீச்சல் பயிற்சி பெற்றிருந்தனர். ஆனால் என்றைக்கு விளைநிலங்கள் மனைகளாக மாறியதோ, ஆறு, குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதும், நவீன மயமாதலும் குழந்தைகள் நீச்சல் கற்க தடையாக அமைந்தது. தற்போது குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க பெரும்பாலான கிணறுகளை காணோம். நீச்சல் குளங்களில் பணம் கொடுத்து கற்றுக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. மேலும் ஆறு, குளங்களுக்கு சென்று குளிக்க சென்றாலும், மணல் கொள்ளையால் எங்கு பள்ளம் இருக்கிறது என்றே தெரிவதில்லை. இதனாலே ஆழம் தெரியாமல் பலர் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கிறது. குறிப்பாக சிறுவர்கள் தான் அதிகளவில் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். அதனால் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பது அவசியம். நீச்சல் பயிற்சியால் உடலும் வலிமை பெறும்.

ஆர்வ மிகுதி

தாழநல்லூரை சேர்ந்த ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் எத்திராஜ்:-

கிராம பகுதிகளை சேர்ந்த சிறுவர்களுக்கு சிறுவயதிலேயே அவர்களது பெற்றோர் ஏரி, குளங்களில் நீச்சல் கற்றுக் கொடுக்கின்றனர். மேலும் அவர்கள் ஏரி, குளங்களில் அடிக்கடி குளிப்பதால், அவர்களுக்கு எந்த இடத்தில் ஆழம் உள்ளது, தண்ணீர் வரத்து எந்த சமயத்தில் அதிகம் இருக்கும் என்பது பற்றிய விவரம் தெரியும். அதனால் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் வெளியூர்களில் இருந்து உறவினர் வீடுகளுக்கு வந்து தங்கியுள்ள சிறுவர்களும், ஏரி, குளங்களை சுற்றி பார்க்க வருபவர்களுமே தான் ஆர்வ மிகுதியால் தண்ணீரில் இறங்கி உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இன்றைய குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு நீச்சல் தெரிவதில்லை. இதனால் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே தனியாக அனுப்பவே பெற்றோர் தயங்குகின்றனர். நீச்சல் கற்றுக்கொண்டால் தங்களை காப்பாற்றிக் கொள்வதுடன், நீரில் தத்தளிக்கும் பிறரையும் காப்பாற்றலாம். அதனால் அனைவரும் நீச்சல் பயிற்சி இன்றியமையாத ஒன்றாகும்.

உயிர் காக்கும் கலை

கடலூரை சேர்ந்த நீச்சல் பயிற்சியாளர் ரமேஷ்: -அனைவருக்கும் நீச்சல் அத்தியாவசியமான ஒன்று. இது உயிர் காக்கும் கலை ஆகும். பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு கண்டிப்பாக நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டும். பிற பயிற்சிகளை போன்று நீச்சல் கற்கும் பயிற்சிக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பெற்றோரிடம் போதிய ஆதரவு இல்லை.

நீச்சல் ஒருமுறை கற்றுக்கொண்டால் எப்போது வேண்டுமானாலும் தண்ணீருக்குள் நீந்தி செல்ல முடியும். இதன்மூலம் உடல் வலுப்பெறும். நீச்சல் அடிக்கும்போது அனைத்து உடல் உறுப்புகளும் செயல்படும். கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் அரசு வழிகாட்டுதலின்படி 5 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அனைவரும், மாவட்ட விளையாட்டு அதிகாரியை சந்தித்து, இங்கு உடனடியாக நீச்சல் பயிற்சி பெறலாம். பெற்றோர், குழந்தைகளை இந்த பயிற்சிக்கு அழைத்து செல்ல வேண்டும். தொடர்ந்து 12 நாட்கள் மட்டும் அழைத்து சென்று நீச்சல் பயிற்சி அளித்து விட்டால், வாழ்நாள் முழுவதும் நீர்நிலைகளுக்கு செல்லும் குழந்தைகள் குறித்து பயப்பட தேவையில்லை.

இன்னல்களை எதிர்கொள்ள...

குப்பநத்தத்தை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் திருநாவுக்கரசு:-

வாழ்க்கை வாழ்வதற்கே. நாம் நமது பிள்ளைகளுக்கு கிராமத்தில் உள்ள குளத்தில் நீச்சல் பழகி கொள்ள கற்றுக் கொடுக்கின்றோம். நகர வாழ்க்கையில் நீச்சல் கற்றுக் கொள்ள நீர் நிலைகள் இல்லை. அப்படியே இருந்தாலும் வேலை பலுவின் காரணமாக அதற்காக எந்த முயற்சியும் எடுப்பதில்லை. பயிற்சியும், முயற்சியும் இருந்தால் உயிர் இழப்புகள் குறையும். நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி பகுதிகளில் ஆங்காங்கே நீச்சல் குளங்கள் கட்டி நீச்சல் பயிற்சி வழங்கலாம். வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களை எதிர்கொள்ள தன்னம்பிக்கை எனும் பயிற்சி அவசியம். அதேபோல் நீரினால் ஏற்படும் இன்னல்களை எதிர்கொள்ள மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சியும் அவசியம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story