கோரையாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகள் அகற்றப்படுமா?
முத்துப்பேட்டை அருகே கோரையாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகள் அகற்றப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
தில்லைவிளாகம்:
முத்துப்பேட்டை அருகே கோரையாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகள் அகற்றப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கோரையாறு
முத்துப்பேட்டையை சுற்றி உள்ள கிராமங்களில் காணப்படும் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவது கோரையாறு ஆகும். இந்த ஆற்றை நம்பி தில்லைவிளாகம், உதயமார்த்தாண்டபுரம், இடும்பாவனம், ஆலங்காடு, உப்பூர், ஜாம்பவானோைட, எடையூர், தோலி போன்ற பல கிராமங்கள் உள்ளன.
இந்த நிலையில் உப்பூர் பகுதியில் உள்ள கோரையாற்றில் ஆகாய தாமரை செடிகள் மண்டி கிடக்கிறது. ஆற்றில் உள்ள தண்ணீர் தெரியாத படி ஆகாயதாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளன.
நெற்பயிர்கள் கருகி வருகின்றன
இதனால் ஆற்றில் இருந்து வயல்களில் தண்ணீர் செல்ல முடியாமல் நெற்பயிர்கள் கருகி வருகின்றன. மழை காலங்களில் வயல்களில் உள்ள மழைநீர் வடிய வைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் ஆகாய தாமரை செடிகளால் மழை காலங்களில் தண்ணீர் செல்ல முடியாமல் கிராமங்களுக்குள் புகுந்து விடுகிறது.
அகற்ற வேண்டும்
ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் கோரையாற்றில் பொதுமக்கள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோரையாற்றில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.