அ.தி.மு.க. பல்லடம் நகர செயலாளர் கைது


அ.தி.மு.க. பல்லடம் நகர செயலாளர் கைது
x
திருப்பூர்

திருப்பூர்:

திருப்பூரில் நூல் பெற்று துணி நெய்து கொடுக்காமல் ரூ.1¼ கோடி மோசடி செய்த வழக்கில் பல்லடம் அ.தி.மு.க. நகர செயலாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரூ.1¼ கோடி மோசடி

கரூர் மாவட்டம் மண்மங்கலம் செம்மடை பகுதியை சேர்ந்தவர் அசோக் ராம்குமார் (வயது 47). இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த ராமமூர்த்தி (45) என்பவர் ஜவுளி துணி உற்பத்தி செய்யும் நிட்டிங் நிறுவனம் வைத்துள்ளார். இவர் அ.தி.மு.க. பல்லடம் நகர செயலாளராகவும் இருந்து வருகிறார். அசோக் ராம்குமார் நூலை மொத்தமாக ராமமூர்த்தியிடம் கொடுத்து துணியை பெற்று வியாபாரம் செய்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த ஓராண்டாக அசோக் ராம்குமார், 1 லட்சத்து 7 ஆயிரத்து 454 கிலோ நூலை 17 ஆர்டர்களாக ராமமூர்த்தியிடம் வழங்கி, துணியாக உற்பத்தி செய்து வழங்குமாறு கொடுத்துள்ளதாக தெரிகிறது. ராமமூர்த்தியின் நிட்டிங் நிறுவனத்தில் கணக்காளராக சங்கர் கணேஷ் பணியாற்றினார். ஆனால் அதற்கான துணியை உற்பத்தி செய்து கொடுக்காமல் ராமமூர்த்தியும், சங்கர் கணேசும் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. நூலின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 21 லட்சத்து 66 ஆயிரம் ஆகும்.

அ.தி.மு.க. நகர செயலாளர் கைது

ராமமூர்த்தியும், சங்கர் கணேசும் சேர்ந்து துணி உற்பத்தி செய்து கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ராமமூர்த்தி, சங்கர் கணேஷ் ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் ராமமூர்த்தியை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மோசடி வழக்கில் பல்லடம் அ.தி.மு.க. நகர செயலாளர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story