விவசாயியிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்தவர் கைது
திருப்பூர்:விவசாயியிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்தவர் கைது
திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே அவினாசிபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 41). விவசாயி. இவர் முகநூல் பக்கத்தில் வந்த கார் விற்பனை விளம்பரத்தை பார்த்தார். இதில் கரூரை சேர்ந்த ராமதாஸ் என்பவர் காரை புகைப்படத்துடன் பதிவிட்டு தனது செல்போன் எண்ணையும் தெரிவித்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து கார்த்திகேயன், செல்போன் மூலமாக ராமதாசிடம் பேசினார். பின்னர் காருக்கான விலையை நிர்ணயம் செய்தனர். ரூ.1½ லட்சத்தை வங்கிக்கணக்கில் செலுத்துமாறு ராமதாஸ், கார்த்திகேயனிடம் கூறியுள்ளார். கார்த்திகேயனும் பணத்தை செலுத்திவிட்டார். அதன்பிறகு ராமதாசின் செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கார்த்திகேயன், திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கூலித்தொழிலாளியான ராமதாஸ் (41) என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.