9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
பல்லடம் அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் அரசுப்பள்ளி கணித ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அரசு உயர்நிலைப்பள்ளி
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேகாம்பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சேகாம்பாளையம், உப்பிலிபாளையம் மற்றும் அருள்புரம் பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் கணித ஆசிரியராக செந்தாமரை கண்ணன் (வயது 57) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்குச் சென்று தலைமையாசிரியரிடம் புகார் அளித்தனர்.
விசாரணை
அதனைத் தொடர்ந்து பல்லடம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) ஆனந்தி மற்றும் பல்லடம் போலீசார் பள்ளிக்குச்சென்று மாணவிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தி கூறுகையில் "ஆசிரியர் செந்தாமரைக்கண்ணன், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்படும்" என்றார்.
இதனிடையே ஆசிரியர் செந்தாமரைக்கண்ணனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
----