மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்தவர் கைது
வெள்ளகோவில் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்தவரை போலீசார் கைது செய்தனர்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கற்பழிப்பு
வெள்ளகோவில் அருகே நாகமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் 48 வயது பெண். இவர் கடந்த 25 வருடங்களுக்கு முன் திருமணமாகி ஒரு வருடத்தில் மன நலம் பாதிக்கப்பட்டு அதிலிருந்து கணவனை பிரிந்து தன்னுடைய தாயாரின் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் அந்த பெண்ணின் தாய் சமையல் வேலைக்கு உதவியாளராக சென்று வருகிறார். நேற்று முன்தினம் இரவு மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகளை வீட்டில் தனியாக விட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டார். நள்ளிரவு 12.30 மணியளவில் பக்கத்து வீட்டுக்காரர்கள் அந்த பெண்ணின் தாயாருக்கு போன் செய்து உங்கள் வீட்டு திண்ணையில் மகளும், அருகே ஒரு ஆணும் ஆடைகள் இல்லாமல் படுத்துக்கொண்டிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கு சென்று விசாரித்ததில் அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி (55) என்பதும் மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.
கைது
இதையடுத்து பெண்ணின் தாயார் இதுகுறித்து காங்கயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்த தண்டபாணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வெள்ளகோவில் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.