1½ டன் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது
திருப்பூர் அருகே ரேஷன் அரிசி கடத்தி சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1560 கிலோ பறிமுதல் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ரேஷன் அரிசி
திருப்பூர் தாராபுரம் ரோடு அவினாசிபாளையம் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் அவிநனாசிபாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் வாகனத்தை ஓட்டி வந்தவர் மதுரை மேலமடை எழில்நகர் பகுதியை சேர்ந்த முகமது முஷாதீன் (வயது 22) என்பதும், அவர் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் இலவசமாக வினியோகிக்கப்படும் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கரூர் மாவட்டத்தில் உள்ள வடமாநிலத்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து சென்றது தெரியவந்தது.
கைது
இதனையடுத்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது முஷாதீனை கைது செய்தனர். மேலும், சரக்கு வாகனம் மற்றும் விற்பனைக்காக கொண்டு சென்ற 1560 கிலோ ரேஷன் அரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.