அ.தி.மு.க. மூலனூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் உள்பட 6 பேர் மீது வழக்கு
ரூ.85 லட்சம் மோசடி செய்த வழக்கில் அ.தி.மு.க. மூலனூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர்
திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்தவர் வி.பி.பெரியசாமி. அ.தி.மு.க. மூலனூர் ஒன்றிய முன்னாள் செயலாளர். இவர் மூலனூரை அடுத்த நத்தப்பாளையம் பகுதியில் குகன் பிட்ஸ் என்ற பெயரில் கோழித்தீவன நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் கோழிக்குஞ்சுகளை பண்ணையாளர்களிடம் கொடுத்து, அதற்கு தேவையான தீவனங்களையும் இவரே வழங்கி வந்தார். கோழிகுஞ்சுகள் பெரிதான பின்னர் அவற்றை வி.பி.பெரியசாமி வாங்கி வெளியூர்களுக்கு அனுப்பி வைப்பார். இந்த நிறுவனத்தில் வி.பி.பெரியசாமியின் மகன் மற்றொரு பெரியசாமி (வயது 55), இவருடைய மனைவி உமா மகேஸ்வரி (55), அவருடைய உறவினர் பெரமியத்தை சேர்ந்த சியாம் (30) மற்றும் பவானியை சேர்ந்த முரளிதரன் (50), அவருடைய மனைவி பிரபாவதி (48) ஆகியோரும் பங்குதாரராக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருப்பூர் முள்ளியங்காடு பல்லவராயதோட்டம் பகுதியை சேர்ந்த கோழித்தீவனம் தயாரிப்பதற்கு மூலப்பொருள் வழங்கும் ராமகிருஷ்ணன் (45) என்பவரிடம் ரூ.85 லட்சத்தை வி.பி.பெரியசாமி மற்றும் அந்த நிறுவன பங்குதாரர்கள் வாங்கியதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அந்த பணத்தை குகன் பிட்ஸ் நிறுவனத்தினர் திருப்பி கொடுக்கவில்லை. இதையடுத்து பணத்தை திருப்பி தரும்படி ராமகிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன், நிறுவனம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார். அதன் பின்னரும் பணம் திருப்பி கொடுக்கப்படவில்ைல என்று கூறுப்படுகிறது.
ஒருவர் கைது
இதையடுத்து வி.பி.பெரியசாமி, அவருடைய மகன் ெபரியசாமி, உமா மகேஸ்வரி, முரளிதரன், பிரபாவதி ஆகியோர் மீது ராமகிருஷ்ணன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வி.பி.பெரியசாமி, அவருடைய மகன் பெரியசாமி, உமா மகேஸ்வரி, சியாம், முரளிதரன், பிரபாவதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து முரளிதரனை கைது செய்தனர். மற்ற 5 ேபரையும் போலீசார் தேடி வருகிறார்கள். கைதான முரளிதரனை தாராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.