1 டன் ரேஷன் அரிசியுடன் வாலிபர் கைது
திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் நேற்று திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி பகுதியில் ரேஷன் பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் தடுப்பு தொடர்பாக ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். கவுண்டம்பாளையம் நால்ரோடு அருகில் போலீசார் சோதனை செய்தபோது அந்த வழியாக மொபட்டில் மூடையுடன் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த மூடையில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. 150 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் அறந்தாங்கி கூகனூர் பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 29) என்பதும், ஊத்துக்குளியில் தங்கியிருந்து அப்பகுதியில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்து வடமாநில தொழிலாளர்களுக்கு அதிகவிலைக்கு விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது. அவர் அளித்த தகவலின் பேரில் அறையில் பதுக்கி வைத்திருந்த 1,000 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 1,150 கிலோ ரேஷன் அரிசி, மொபட்டை பறிமுதல் செய்து விக்னேஸ்வரனை கைது செய்தனர்.