தர்மபுரி அருகே இரட்டை கொலையில் விவசாயி கைது
தர்மபுரி:
தர்மபுரி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை அடுத்த ஒன்னியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 55). விவசாயி. இவருக்கு மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் அருகே உள்ள விவசாய நிலங்களில் வரப்பு தொடர்பாக ராஜமாணிக்கத்திற்கும், மற்றொரு விவசாயியான பெரியசாமி (50) என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் தனது விவசாய நிலத்தில் ராஜமாணிக்கம், இவருடைய தாய் பழனியம்மாள் ஆகியோர் பணியில் ஈடுபட்டனர். அப்போது வரப்பு தொடர்பாக ராஜமாணிக்கத்துக்கும், பெரியசாமிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பெரியசாமி, அரிவாளால் ராஜமாணிக்கம், பழனியம்மாளை சரமாரியாக வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார்.
இதில் படுகாயம் அடைந்த தாய்-மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக கிருஷ்ணாபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து தலைமறைவான பெரியசாமியை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று விவசாயி பெரியசாமி கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் இன்ஸ்பெக்டர் சர்மிளா பானு மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.இதைதொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.