63 பேரிடம் ரூ.96 லட்சம் மோசடிகாண்டிராக்டர் உள்பட 3 பேர் கைது
அரசின் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கிக்கொடுப்பதாக கூறி 63 பேரிடம் ரூ.96 லட்சம் மோசடி செய்த காண்டிராக்டர் உள்பட 3 பேரை திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ரூ.96 லட்சம் மோசடி
திருப்பூர் நெருப்பெரிச்சல், கணக்கம்பாளையம், திருமுருகன்பூண்டி பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு வீடு இல்லாதவர்களுக்கும், நீர்நிலை புறம்போக்கில் குடியிருப்பவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் திருப்பூர் சுற்றுப்புற பகுதியை சேர்ந்தவர்களிடம் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்வதாக கூறி ஒரு கும்பல் பணம் பெற்று மோசடி செய்ததாக திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்த மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான தனிப்படையினர் இதுதொடர்பாக விசாரணையை தொடங்கினார்கள். இதில் திருப்பூர் போயம்பாளையம் அவினாசி நகரை சேர்ந்த கனகராஜ் (வயது 44), கணக்கம்பாளையத்தை சேர்ந்த முருகன் (27), அவினாசியை சேர்ந்த பழனிசாமி (60) ஆகியோர் சேர்ந்து அரசு குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு செய்வதாக கூறி 63 பேரிடம் ரூ.96 லட்சம் மோசடி செய்து கடந்த 2 மாதமாக தலைமறைவானது தெரியவந்தது.
3 பேர் கைது
இந்த நிலையில் கனகராஜ், பழனிசாமி, முருகன் ஆகிய 3 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ஒரு காரை பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கனகராஜ் கட்டிட காண்டிராக்டர் தொழில் செய்து வந்துள்ளார். அவரிடம் முருகன் டிரைவராக வேலை செய்து வந்தார். பழனிசாமி எல்.ஐ.சி. முகவர் ஆவார். அரசின் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிக்கொடுக்கும் பணியை கனகராஜ் மேற்கொள்வதாகவும், ஒவ்வொரு திட்டத்திலும் 10 வீடுகள் தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வீடுகளை பெற்றுக்கொடுப்பதாக மக்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார். அதற்காக முத்திரைத்தாளில் போலியாக ஆணை போல் அவரே எழுதிக்கொடுத்துள்ளார்.
பழனிசாமி, முருகன் இருவரும் புரோக்கர் போல் செயல்பட்டுள்ளனர். அவர்கள் கனகராஜிடம் ஆட்களை கொண்டு வந்து விட்டால் அதற்கு கமிஷன் பெற்று வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்