போலீஸ் நிலையத்தில் தகராறு; ராணுவ வீரர் அதிரடி கைது
பனவடலிசத்திரத்தில் போலீஸ் நிலையத்தில் தகராறு செய்த ராணுவ வீரர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
பனவடலிசத்திரம்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரம் முத்தம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் பஷீர் மைதீன் (வயது 70). இவர் புரோட்டா கடை நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது கடைக்கு ஆராய்ச்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜோதிராஜ் (27), ராணுவ வீரர் முத்துப்பாண்டி (31), அவர்களுடைய நண்பர்கள் சசிபாண்டி (29), ராமச்சந்திரன் (25) ஆகிய 4 பேர் சாப்பிட சென்றனர்.
அப்போது ஓட்டல் உரிமையாளர் பஷீர் மைதீனுக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஓட்டலில் இருந்த மேஜை, கல்லாப்பெட்டிகளை அடித்து நொறுக்கினர். மேலும் தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெயராஜ், ஏட்டு வள்ளி மணவாளன் ஆகியோரை ராணுவ வீரர் முத்துப்பாண்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜோதிராஜ், முத்துப்பாண்டி, சசிபாண்டி, ராமச்சந்திரன் ஆகிய 4 பேரையும் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பனவடலிசத்திரம் அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த அமல்ராஜ் (35) என்ற ராணுவ வீரர் மதுபோதையில் பனவடலிசத்திரம் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு அவர், ஒரு ராணுவ வீரரை எப்படி நீங்கள் அடிக்கலாம் என்று கூறி போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.