கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதத்தால் பரபரப்பு


கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதத்தால் பரபரப்பு
x

ராஜபாளையம் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நகராட்சி கூட்டம்

ராஜபாளையம் நகராட்சியின் அவசர கூட்டம் தலைவர் பவித்ரா ஷியாம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர் கல்பனா குழந்தைவேல், ஆணையாளர் பார்த்தசாரதி மற்றும் 42 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 94 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணத்தை குறைக்க முயற்சி செய்த நகராட்சி தலைவர், எம்.எல்.ஏ., ஆகியோருக்கு கவுன்சிலர்கள் நன்றி தெரிவித்தனர். பின்னர் துணைத்தலைவர் கல்பனா பேசும்போது தன்னுடைய 32-வது வார்டில் இருந்த பொது கழிப்பறை சேதம் அடைந்து உள்ளதாகவும் சுற்றி முள் புதர்கள் அதிகம் வளர்ந்திருப்பதால் ஒருவர் பாம்பு கடித்து இறந்திருப்பதாகவும் புகார் தெரிவித்தார். எனவே புதிய கழிப்பறை கட்டி தர கோரி 6 மாதங்களாக வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நகராட்சி ஆணையாளரிடம் கேள்வி எழுப்பினர்.

வாக்குவாதம்

இதற்கு நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி பதில் அளித்து கூறுகையில், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் மட்டுமே புதிய கழிப்பறை கட்ட முடியும் என தெரிவித்தார். இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக பதில் தர கோரி துணைத்தலைவர் ஆணையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பேசிய அ.தி.மு.க. கவுன்சிலர் மீனாட்சி, தன்னுடைய வார்டில் சுகாதார பணிகள் முறையாக செய்யப்படுவதில்லை. குடிநீரில் சாக்கடை கழிவுகள் கலப்பதற்கு தற்காலிக தீர்வு மட்டுமே எடுக்கப்பட்டுள்ளதாகவும், நிரந்தர தீர்வு தேவை என கூறினார்.

அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதே நேரத்தில் கண்டனம் தெரிவித்த தி.மு.க. கவுன்சிலர்களை மற்ற தி.மு.க. கவுன்சிலர்கள் கண்டித்ததால் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.


Next Story