விசாரணை கமிஷன் அமைப்பது தொடர்பாக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்


விசாரணை கமிஷன் அமைப்பது தொடர்பாக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்
x
தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களிடம் பணம் வாங்குவது போன்ற வீடியோ வைரலானதை தொடர்ந்து, விசாரணை கமிஷன் அமைப்பது தொடர்பாக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூடலூர் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.

நீலகிரி

கூடலூர்

பொதுமக்களிடம் பணம் வாங்குவது போன்ற வீடியோ வைரலானதை தொடர்ந்து, விசாரணை கமிஷன் அமைப்பது தொடர்பாக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூடலூர் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.

நகராட்சி கூட்டம்

கூடலூர் நகராட்சி மாதாந்திர கூட்டம், நேற்று மதியம் 12 மணிக்கு மன்ற அரங்கில் நடைபெற்றது. இதற்கு தலைவர் பரிமளா தலைமை தாங்கினார். ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர், துணைத்தலைவர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் பொறியாளர் பார்த்தசாரதி, மேலாளர்(பொறுப்பு) கிளாடிஸ், பணி மேற்பார்வையாளர் ஆல்தொரை மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு, மன்ற ஒப்புதல் பெறப்பட்டது.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-

கவுன்சிலர் உஸ்மான்(காங்கிரஸ்): பொதுமக்களிடம் கவுன்சிலர் ஒருவர் பணம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மன்றத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. எனவே விசாரணை கமிஷன் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுன்சிலர் சத்தியசீலன் (தி.மு.க.): நான் பணம் வாங்கி நகராட்சி தலைவரிடம் கொடுத்தேன். அதற்கான ஆதாரம் வைத்துள்ளேன்.

கவுன்சிலர் வெளிநடப்பு

நகராட்சி தலைவர் பரிமளா(தி.மு.க.): இன்று(நேற்று) வெள்ளிக்கிழமை. எனது குழந்தைகள் மீது சத்தியமாக கூறுகிறேன் நான் பணம் வாங்கவில்லை. என் மீது தவறான தகவலை மன்ற உறுப்பினர் தெரிவித்து வருவது கண்டனத்திற்குரியது.

கவுன்சிலர் ராஜூ(காங்கிரஸ்): மன்றத்துக்கு தேவையில்லாத தகவல்களை பேசக்கூடாது. வார்டுகளில் நடக்கக்கூடிய மற்றும் நடக்க வேண்டிய பணிகளை மட்டுமே பேச வேண்டும். கவுன்சிலர் உஸ்மான், மன்றத்துக்கு சம்பந்தமில்லாததை பேசி வருகிறார்.

அப்போது கவுன்சிலர்கள் உஸ்மான், ராஜூவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர்களுக்கு இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மன்ற கூட்டத்தில் கூச்சல்-குழப்பம் நிலவியது. தொடர்ந்து கவுன்சிலர் ராஜூ, மன்ற கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர்: கவுன்சிலர்கள் மன்ற தீர்மானங்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டும். கவுன்சிலர் உஸ்மான்: பணம் வாங்கியது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.

நகராட்சி தலைவர்: விசாரணை கமிஷன் அமைக்கப்படும்.

பாதியில் நிற்கும் பூங்கா பணி

கவுன்சிலர் ராஜேந்திரன்(தி.மு.க.): வார்டுகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை தர கட்டுப்பாட்டு அலுவலர் ஆய்வு செய்வதில்லை.

ஆணையாளர்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

துணைத்தலைவர் சிவராஜ்: கூடலூர் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்து தர இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. கண்டிப்பாக அமைத்து தரப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

கவுன்சிலர் உஸ்மான்: கூடலூர் நீதிமன்றம் அருகே பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டு பாதியில் இருந்து வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அதில் செலவழிக்கப்பட்ட பல லட்சம் ரூபாய் வீணாகி உள்ளது.

இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது.


Next Story