சுடுகாட்டை மாற்றுவது தொடர்பாக உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம்
நாகையில் தனியார் பள்ளி அருகே உள்ள சுடுகாட்டை மாற்றுவது தொடர்பாக உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் நகர் மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வெளிப்பாளையம்:
நாகையில் தனியார் பள்ளி அருகே உள்ள சுடுகாட்டை மாற்றுவது தொடர்பாக உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் நகர் மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நகர் மன்ற கூட்டம்
நாகை நகர் மன்ற மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். ஆணையர் ஸ்ரீதேவி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-
நத்தர்(காங்கிரஸ்):- நகராட்சியில் வரிக்கட்டுவதை முறைப்படுத்த வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
மின்மயானமாக மாற்ற வேண்டும்
மணிகண்டன்(அ.தி. மு.க.):- நாகை சொக்கநாதர் கோவில் தெருவில் உள்ள தனியார் பள்ளி அருகே மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சுடுகாடு உள்ளது. இங்கு உடல்களை எரிக்கும் போது புகை வருவதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே புகை வராமல் தடுக்கும் வகையில் மின் மயானமாக மாற்ற வேண்டும். இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் பேசி, அவர்கள் செலவிலேயே இதை அமைக்க வேண்டும். நகராட்சி நிதியை பயன்படுத்தக்கூடாது. எனது வார்டில் சாலைகளில் சாக்கடை நீர் தேங்குவதால் பாதிப்பு ஏற்படுகிறது.
பள்ளி குழந்தைகளுக்கு சுவாச கோளாறு
சுரேஷ்(தி.மு.க.):- பருவமழை தொடங்க உள்ளதால் நகராட்சிக்குட்பட்ட வடிகால் வாய்க்கால்களை தூர்வாருவதுடன், நகரம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குளங்களையும் மீட்க வேண்டும்.
ஜோதிலட்சுமி(இ.கம்யூ):- நெய்தல் நகரிலிருந்து பூங்காநகர் செல்லும் பகுதியில் தார்ச்சாலை அமைக்க வேண்டும். சொக்கநாதர் கோவில் தெருவில் தனியார் பள்ளி அருகே உள்ள சுடுகாட்டில் சிமெண்டு தளம் அமைக்க வேண்டும். இங்கு உடல்கள் எரிக்கும் போது ஏற்படும் புகையால் பள்ளி குழந்தைகளுக்கு சுவாச கோளாறு ஏற்படுகிறது. எனவே இந்த சுடுகாட்டை மின்மயானமாக மாற்ற வேண்டும். அப்போது இதே கருத்தை பல உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம்
சுரேஷ்(தி.மு.க.):- அந்த சுடுகாட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றார். இதற்கு மற்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
நகர் மன்ற தலைவர் மாரிமுத்து பேசுகையில், இது தொடர்பாக பள்ளி நிர்வாகிகளை நேரில் சந்தித்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
சுற்றுச்சூழல் துறைக்கு தெரிவித்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரே பிரச்சினையை பேசி நேரத்தை வீணடிக்காமல், கோரிக்கைகளை சுருக்கமாக பேச வேண்டும் என்றார். இவ்வாறு விவாதம் நடந்தது.
பரபரப்பு
நகர் மன்ற கூட்டத்தில் தனியார் பள்ளி அருகே உள்ள சுடுகாட்டை மாற்றுவது தொடர்பாக நகர் மன்ற உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.