ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் வாக்குவாதம்


ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் வாக்குவாதம்
x
தினத்தந்தி 11 Jun 2023 6:45 PM GMT (Updated: 11 Jun 2023 6:47 PM GMT)

திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று ஊராட்சி மன்ற தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சிறுவானூர் ஊராட்சி மன்ற தலைவர் பாரதிமோகன்ராஜ் என்பவரையும், செயலாளராக காளியம்மாள் வீராசாமி (அரும்பட்டு), பொருளாளராக சண்முகம் (பொய்அரசூர்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதன் பிறகு ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஆதரவாக கூட்டமைப்பு தலைவர் செயல்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் புதிய தலைவராக பனப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக இளையராஜா, செயலாளராக சரஸ்வதி பல்லவன் (ஆனத்தூர்), பொருளாளராக சண்முகம் (பொய்கைஅரசூர்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த சம்பவம் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் தி.மு.க.வினரிடையே இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் ஓம்சிவசக்திவேல், தி.மு.க.ஒன்றிய செயலாளர்கள் விசுவநாதன், சந்திரசேகரன் ஆகியோர் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் ஏற்கனவே ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவராக தேர்வு செய்யப்பட்ட பாரதிமோகன்ராஜ் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து அப்பதவியில் நீடிப்பார்கள் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு சில ஊராட்சி மன்ற தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை மற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் சமாதானப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story