ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாக வாக்குவாதம்
ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாக வாக்குவாதம் ஏற்பட்டது.
விழுப்புரம் - மங்களூரு தேசிய நெடுஞ்சாலை பேரணாம்பட்டு நகரத்துடன்புத்துக் கோயில் பகுதியில் இணைகிறது. கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு நெடுஞ்சாலை துறை சார்பில் பேரணாம்பட்டு நகரில் சாலை விரிவாக்கத்திற்காக சாலையின் நடுவில் புத்துக் கோயில் பகுதியில் இருந்து மத்தூர் கிராமம் வரையில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. ஆனால் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வில்லை.
இதனால் ஆக்கிரமிப்பு அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் சாலையை கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று நெடுஞ்சாலைத் துறையினர் பேரணாம்பட்டு நகராட்சி ஆணையாளர் சுபாஷினி, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் அருள் செல்வதாஸ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆகியோருடன் இணைந்து போலீஸ் பாதுகாப்புடன் பேரணாம்பட்டு நகரில் புத்துக் கோயில் சந்திப்பு சாலை பகுதியிலிருந்து ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றும் போது ஒரு சில பகுதிகளில் கால்வாய் மீது ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள சில வணிக நிறுவனங்கள், கடைகளை கண்டுகொள்ளாமல் பாரபட்சமாக நடப்பதாக, நெடுஞ்சாலை துறையினரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.