டீக்கடைக்கு 'சீல்' வைக்க முயன்ற அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு


டீக்கடைக்கு சீல் வைக்க முயன்ற அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில், சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்களை விற்பனை செய்த டீக்கடைக்கு ‘சீல்’ வைக்க முயன்ற அதிகாரிகளிடம் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை


மயிலாடுதுறையில், சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்களை விற்பனை செய்த டீக்கடைக்கு 'சீல்' வைக்க முயன்ற அதிகாரிகளிடம் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திடீர் சோதனை

மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் உள்ள ஒரு டீக்கடையில் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் வந்ததது.

அதன் பேரில் நகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சீனிவாசன் தலைமையில் நேற்று முன்தினம் இரவு அந்த டீக்கடையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த கடையில் வடை தயாரிக்க பயன்படுத்தும் எண்ணெய்யை மாற்றாமல் அதை மீண்டும் பயன்படுத்தியது தெரிய வந்தது.

வாக்குவாதம்

இதனைத்தொடர்ந்து நகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த டீக்கடையை பூட்டி 'சீல்' வைக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த சிலர்,, டீக்கடைக்கு ஆதரவாக அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள், சுகாதாரமற்ற முறையில் எத்தனையோ கடைகள் உள்ளன. அங்கு நடவடிக்கை எடுக்காமல், இந்த டீக்கடையை மட்டும் ஏன் பூட்டி சீல் வைக்கிறீர்கள்? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

'சீல்' வைக்காமல் திரும்பி சென்றனர்

இதனால் டீக்கடைக்கு 'சீல்' வைக்காமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர். இதையடுத்து அந்த டீக்கடைக்கு எதிரே இருந்த பழக்கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு இருந்த மாம்பழங்கள் ரசாயனம் தடவி பழுக்க வைக்கப்பட்டதும், கடையின் உரிமம் புதுப்பிக்கப்படாததும் தெரிய வந்தது.

இதன் காரணமாக அதிகாரிகள், அந்த பழக்கடைக்கு 'சீல்' வைக்க முயன்றனர். அங்கு திரண்ட பொதுமக்கள் டீக்கடைக்கு 'சீல்' வைக்காமல், பழக்கடைக்கு மட்டும் 'சீல்' வைக்கிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அதிகாரிகளால் பழக்கடைக்கும் 'சீல்' வைக்க முடியவில்லை.

இதுகுறித்து மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து நடவடிக்கை எடுக்க முடியாமல் நகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் திரும்பி சென்றனர்.

பரபரப்பு

டீக்கடையில் 'சீல்' வைக்க முயன்ற அதிகாரிகளிடம் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story