தொழிலாளி உடலை பெற வந்தவர்கள் போலீசாரிடம் வாக்குவாதம்; பழனி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு


தொழிலாளி உடலை பெற வந்தவர்கள் போலீசாரிடம் வாக்குவாதம்; பழனி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு
x
தினத்தந்தி 2 July 2023 2:30 AM IST (Updated: 2 July 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி வாகனம் மோதியதில் பலியான தொழிலாளியின் உடலை வாங்க வந்தவர்கள், பழனி அரசு ஆஸ்பத்திரியில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

பள்ளி வாகனம் மோதியதில் பலியான தொழிலாளியின் உடலை வாங்க வந்தவர்கள், பழனி அரசு ஆஸ்பத்திரியில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

விபத்தில் தொழிலாளி பலி

பழனி அருகே உள்ள பாப்பம்பட்டியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 35). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், மோட்டார் சைக்கிளில் பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட முருகானந்தம் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, முருகானந்தத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், முருகானந்தத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது, தனியார் பள்ளி வாகனம் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வாக்குவாதம்

இந்தநிலையில் நேற்று முருகானந்தத்தின் உடலை பெற அவரது குடும்பத்தினர், உறவினர்கள் என ஏராளமானோர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அப்போது அவர்கள் திடீரென்று பழனி அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு, விபத்து தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், முருகானந்தம் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், முருகானந்தத்தின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை கேட்காத சிலர், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிலும் 2 பேர் போலீசாரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த 2 பேரையும் போலீசார் பிடித்து சென்றனர். பின்னர் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு

மேலும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கு திரண்டு இருந்தவர்களை கலைந்துபோக செய்தனர். அதேபோல் முருகானந்தத்தின் உடல், அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திடீரென்று குவிந்த உறவினர்களாலும், போலீசாரிடம் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவமும் பழனி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story