யானை கூட்டத்தை நெருங்கி வரும் அரிக்கொம்பன் யானை


யானை கூட்டத்தை நெருங்கி வரும் அரிக்கொம்பன் யானை
x
தினத்தந்தி 27 Jun 2023 2:10 AM IST (Updated: 27 Jun 2023 2:03 PM IST)
t-max-icont-min-icon

யானை கூட்டத்தை அரிக்கொம்பன் யானை நெருங்கி வருவதாக வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு டுவிட்டரில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

யானை கூட்டத்தை அரிக்கொம்பன் யானை நெருங்கி வருவதாக வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு டுவிட்டரில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அரிக்கொம்பன் யானை

கேரளாவில் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியிலும், தமிழகத்தில் தேனி மாவட்டம் கம்பம் மற்றும் குமுளி ஆகிய இடங்களில் புகுந்து அட்டகாசம் செய்த அரிக்கொம்பன் யானைைய வனத்துறையினர் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அதை லாரியில் ஏற்றி நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் உள்ள அப்பர் கோதையாறு பகுதியில் விட்டனர். குமரி மாவட்டத்தையொட்டி இந்த வனப்பகுதி அமைந்துள்ளது. சுமார் 5 கி.மீட்டர் சுற்றளவில் அங்கு அரிக்கொம்பன் யானை உலா வருகிறது. அதே சமயத்தில் யானையின் நடமாட்டம் மற்றும் அதன் உடல் நலம் குறித்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

அரிக்கொம்பன் யானை குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அரிசியை உண்டு வளர்ந்து வந்தது. ஆனால் தற்போது அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டுள்ளதால், அங்கு கிடைக்கும் இலை, தழை உள்ளிட்ட இயற்கை உணவை அது சரியாக உண்ணாமல் தண்ணீரை மட்டும் குடித்து வந்தது. இதனால் அதன் உடல் மெலிந்து காணப்பட்டது.

புதிய தகவல்

இதையடுத்து யானை உடல் மெலிந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. அரிசியை சாப்பிட்டு வந்த யானை, இயற்கை உணவுக்கு மாறியதால் உடல் மெலிந்து மீண்டும் இயல்பு நிலைக்கு மாறும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் அரிக்கொம்பன் யானை குறித்து வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'களப்பணியாளர் அளித்த தகவலின்படி, அரிக்கொம்பன் யானை திடகாத்திரமாக நலமுடன் உள்ளது. இது தற்போது வசிக்கும் இடத்திற்கு ஏற்ப மாறி, வசதியாக வன பகுதியை சுற்றி வருகிறது. உற்சாகத்துடன் இருக்கும் அரிக்கொம்பன் யானையின் அருகே மற்ற காட்டு யானைகளும் வந்து செல்கின்றன. அரிக்கொம்பன் யானை குறித்த வதந்தி செய்திகளை நம்ப வேண்டாம்' என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரிக்கொம்பன் காட்டு பகுதியில் சுற்றிவரும் 12 வினாடி வீடியோ ஒன்றையும், அரிக்கொம்பன் யானையின் அருகே நிற்கும் மற்ற யானை கூட்டங்களின் படங்களையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Next Story