அப்பர் கோதையாறில் ஜாலியாக வலம் வரும் அரிக்கொம்பன் யானை
அப்பர் கோதையாறில் அரிக்கொம்பன் யானை ஜாலியாக வலம் வரும் வீடியோவை வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டார்.
நாகர்கோவில்,
அப்பர் கோதையாறில் அரிக்கொம்பன் யானை ஜாலியாக வலம் வரும் வீடியோவை வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டார்.
அரிக்கொம்பன் யானை
தமிழகம் மற்றும் கேரளாவில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர் பிடித்து நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் உள்ள அப்பர் கோதையாறு பகுதியில் விட்டனர். அங்கு அரிக்கொம்பன் யானை நன்கு சாப்பிட்டபடி சுற்றி வருகிறது. யானையின் நடமாட்டத்தையும், அதன் உடல் நிலையையும் ரேடியோ காலர் கருவி மூலமாக வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரிக்கொம்பன் யானை உடல் மெலிந்த தோற்றத்துடன் காட்சி அளிக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் யானை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்லும் போது இதுபோன்று உடல் மெலிந்து பின்னர் தான் சரியாகும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். தற்போது அரிக்கொம்பன் யானை காட்டு பகுதியில் உற்சாகமாக வலம் வருகிறது.
வீடியோ வெளியீடு
இதற்கிடையே வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் அரிக்கொம்பன் யானை பற்றி பதிவிட்டு இருந்தார். இந்தநிலையில் அவர் அாிக்கொம்பன் யானை பற்றி மேலும் ஒரு வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். 14 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் அரிக்கொம்பன் யானை ஜாலியாக நடந்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'அரிக்கொம்பன் யானையின் தற்போதைய வாழ்விடமான அப்பர் கோதையாறில் யானையின் நடமாட்டத்தை கள இயக்குனரின் தலைமையிலான சிறப்புக் குழு கண்காணித்தது. யானை நன்றாக காணப்பட்டது' என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.