அரிக்கொம்பன் யானையை கேரள வனப்பகுதியில் விட வேண்டும்
அப்பர் கோதையாறில் வலம் வரும் அரிக்கொம்பன் யானையை கேரள வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் எர்ணா குளத்தை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர்.
நாகர்கோவில்:
அப்பர் கோதையாறில் வலம் வரும் அரிக்கொம்பன் யானையை கேரள வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் எர்ணா குளத்தை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர்.
அரிக்கொம்பன் யானை
கேரளா மற்றும் தமிழகத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர் பிடித்து களக்காடு முண்டந்துறை வனப்பகுதியான அப்பர் கோதையாறில் விட்டனர். அந்த யானையை தற்போது வனத்துறை அதிகாரிகள் ரேடியோ காலர் கருவி மூலமாக கண்காணித்து வருகிறார்கள். ஆனால் யானையை கேரள வனப்பகுதியில் விட வேண்டும் என்று திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் எர்ணாகுளத்தை சேர்ந்த வேணுகோபால் உள்பட 5 பேர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உணவு-மருந்து
அரிக்கொம்பன் யானை கேரள மாநிலம் சின்னக்காயல் பகுதியில் பிறந்தது. அந்த யானை தற்போது தமிழக வனப்பகுதியில் வைத்துள்ளனர். அரிக்கொம்பன் யானை ஒரே இடத்தில் இருப்பது போன்ற வீடியோ மற்றும் புகைப்படத்தை அதிகாரிகள் வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் யானையின் உண்மையான நிலையை வெளியிடவில்லை. எனவே, யானைக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகளை வழங்கி நன்றாக பராமரிக்க வேண்டும்.
மேலும், அரிக்கொம்பன் யானையை அது பிறந்த இடமான சின்னகாயல் வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் உடல்நிலை தற்போது என்ன நிலையில் உள்ளது என்பதை அறிவதற்கு திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் ஆர்வமாக உள்ளனர். அதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.