மாஞ்சோலை தேயிலை தோட்டப்பகுதியில் ஆக்ரோஷமாக நடமாடும் 'அரிக்கொம்பன்'
மாஞ்சோலை தேயிலை தோட்டப்பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபட்ட 'அரிக்கொம்பன்' யானை ஆக்ரோஷமாக நடமாடுவதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அம்பை:
கேரள மாநிலம் மூணாறு மற்றும் தமிழ்நாட்டில் தேனி மாவட்ட மக்களை கடந்த ஜூன் மாதம் கலங்கடித்த யானை 'அரிக்கொம்பன்'. இந்த யானை வனத்தை விட்டு வந்து கம்பம் நகருக்குள் புகுந்து மக்களை ஓடவிட்டும், கடைகள், வீடுகளையும் பந்தாடியது. தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்ட இந்த யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து நெல்லை மாவட்டத்துக்கு லாரியில் கொண்டு வந்தனர். அரிக்கொம்பன் யானையை நெல்லை மாவட்ட வனப்பகுதியில் விடக்கூடாது என்று பல்வேறு தரப்பினர் போராட்டமும் நடத்தினர்.
எனினும் அந்த யானை மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, மேல் கோதையாறு அணை வழியாக கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியான முத்துக்குழி வயல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் யானையை கண்காணிப்பதற்காக அதன் கழுத்தில் ரேடார் கருவியும் பொருத்தப்பட்டு இருந்தது.
நேற்று முன்தினம் இரவு நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானை திடீரென்று புகுந்தது. அதாவது, நாலுமுக்கு தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் சவுந்தர்யா என்பரது வீட்டின் முன்பு இருந்த வாழை மரங்களை சாய்த்தும், வாழைத்தார்களை தின்றும் அட்டகாசத்தில் ஈடுபட்டது.
மேலும் ஊத்து பகுதியில் வரதன் என்பவரது வீட்டின் கதவை தள்ளி மேற்கூரையை சேதப்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, யானையின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வந்தனர்.
நேற்று அதிகாலை ஊத்து எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகே அரிக்கொம்பன் யானை நிற்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் யானை அங்கு இல்லை. இதற்கிடையே அரிக்கொம்பனின் கழுத்தில் உள்ள ரேடார் இணைப்பு சரியாக கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அம்பை, களக்காடு வனக்கோட்டங்களை சேர்ந்த சுமார் 80-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அரிக்கொம்பன் யானையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த சுமார் 2½ மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை குடியிருப்பு பகுதிகளுக்கு வந்ததால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். அதை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்றும், மறுபடியும் குடியிருப்பு பகுதிக்கு வராமல் வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அரிக்கொம்பன் நடமாட்டத்தை தொடர்ந்து மாஞ்சோலை, நாலுமுக்கு, குதிரைவெட்டி, காக்காச்சி ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல காலவரையின்றி தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பக பிரியா கூறியதாவது:- அரிக்கொம்பன் யானை கண்ணுக்கு மேலே 'மஸ்து' உள்ளது. அது இருக்கும் வரை யானை ஆக்ரோஷமாக நடமாடும். இதுபோன்ற பாதிப்பு ஆண்டுக்கு ஒருமுறை வரும். அதனை சரி செய்ய மருத்துவக்குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளோம். அதன்பின்னர் முண்டந்துறை அடர் வனப்பகுதிக்கு யானை விரட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.