ஆரியூர்நாடு ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலெக்டரிடம் மனு
ஆரியூர்நாடு ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
நாமக்கல்:
கொல்லிமலை தாலுகா ஆரியூர்நாடு ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முத்துசாமி, ருபினி, வனிதா, சசிகலா மற்றும் நீலாமணி ஆகிய 5 பேர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஊராட்சியில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் கூட்டத்தில் வரவு- செலவு கணக்குகளை வார்டு உறுப்பினர்களுக்கு தெரிவிப்பது இல்லை. அரசு சலுகைகள் மற்றும் திட்டங்கள், அடிப்படை வசதிகளை செய்வதில் பாரபட்சம் காட்டப்பட்டு வருகிறது. ஊராட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பதிவு செய்யப்படும் தீர்மான நகலில் எங்கள் 5 பேரிடமும் ஆலோசனை கேட்பது இல்லை. எனவே அரசின் திட்டங்களை முறையாக பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தாங்கள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கொல்லிமலையில் பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பொறுப்புகளை அவர்களது கணவர்கள் கவனித்து வருகின்றனர். எனவே கொல்லிமலையில் தாங்கள் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட உறுப்பினர் மட்டுமே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.