ராகுல் காந்திக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்


ராகுல் காந்திக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்
x
திருப்பூர்


கன்னியாகுமரியில் இருந்து நடைபயணம் தொடங்கும் ராகுல்காந்திக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.

மண் வளம் காப்போம்

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று திருப்பூர் ராயபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அங்கு நடந்த விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்றார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் 50 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்கு காவல்துறை, வருவாய்த்துறையினர் ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். மண் வளம் காப்போம் என்ற தலைப்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் மண் வளத்தை காக்கும் வகையில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி சட்டம் இயற்ற வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது இந்துக்கள் மீது இருக்கும் வெறுப்புணர்வை காட்டுகிறது.

ஆவின் நிறுவன பால் பாக்கெட்டுகளில் கிறிஸ்துமஸ், ரம்ஜானுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள். ஆனால் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெயரை வைக்க மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அரசு அனுமதிக்க வேண்டும்.

ராகுல்காந்திக்கு கருப்புக்கொடி எதிர்ப்பு

கனியாமூர் தனியார் பள்ளி விவகாரத்தில் கோர்ட்டு தெளிவான முடிவை தெரிவித்த பிறகும், யூடியூபர்கள் விவாதம் என்று திசை திருப்புகிறார்கள். 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேசிய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் பாரதம் பிரிக்கப்பட்டது. பிரிவினையை சந்தித்தது. காங்கிரஸ் கட்சியில் தேசியவாதிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். முதலில் காங்கிரசை ஒருங்கிணைக்க வேண்டும். இந்த பயணம் மேற்கொள்ள காங்கிரசுக்கு அருகதையில்லை. எனவே ராகுல்காந்தி தமிழகத்துக்கு வரக்கூடாது. 'கோ பேக் ராகுல்' என்ற இயக்கத்தை இந்து மக்கள் கட்சி நடத்துகிறது. ராகுல்காந்திக்கு எதிராக கன்னியாகுமரியில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஹரிகரன், திருப்பூர் மாவட்ட செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.


Next Story