மேல்பாதி கோவிலில் 2-வது நாளாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
மேல்பாதி கோவிலில் 2-வது நாளாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வெளியூர்காரர்கள் கிராமத்துக்குள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா, திரவுபதியம்மன் கோவிலில் வழிபாடு நடத்த ஒரு தரப்பினருக்கு மற்றொரு தரப்பினர் அனுமதி மறுத்து வருகின்றனர். இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் எல்லோருக்கும் வழிபாடு நடத்த அனுமதி உண்டு என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் மற்றொரு தரப்பினர், இக்கோவில் தங்களுக்கு சொந்தமானது, இது தங்களுடைய மூதாதையர் காலத்தில் இருந்து வழிபட்டு வருகிற குலதெய்வ கோவில், இதில் இந்து சமய அறநிலையத்துறையினருக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறி வருகின்றனர்.
இப்பிரச்சினை தொடர்பாக விழுப்புரம் கோட்டாட்சியர் தலைமையில் 5 முறையும், மாவட்ட கலெக்டர் தலைமையில் 3 முறையும் என 8 கட்டங்களாக இரு தரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தியும் இரு தரப்பினருக்கும் எந்தவித சுமூகமான உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டும், சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பாதுகாத்திடும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் காலை அந்த கோவிலை வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
2-வது நாளாக பாதுகாப்பு
இச்சம்பவத்தினால் மேல்பாதி கிராமத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நீடித்து வருவதால் அங்கு ஏதேனும் அசம்பாவித சம்பவம் நிகழாமல் இருக்க நேற்று முன்தினம் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
இதனிடையே கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரும் இன்று (வெள்ளிக்கிழமை) விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டுமென்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளதால் இன்று இரு தரப்பினரிடமும் விசாரணை நடைபெற உள்ள நிலையில் போலீஸ் அதிகாரிகள், தொடர்ந்து அக்கிராமத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் நேற்றும் 2-வது நாளாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வெளியூரை சேர்ந்த நபர்களை மேல்பாதி கிராமத்திற்குள் செல்ல விடாமல் அனுமதி மறுத்து அப்படியே திருப்பி அனுப்பி வருகின்றனர்.