51 ஆண்டுகளாக பட்டா வழங்காமல் அலைக்கழிப்பு: ராணுவ வீரரின் குடும்பத்தினர் மண்டியிட்டு போராட்டம்
51 ஆண்டுகளாக பட்டா வழங்காமல் அலைக்கழிப்பு செய்து வருவதை கண்டித்து ராணுவ வீரரின் குடும்பத்தினர் சாலையில் மண்டியிட்டு போராட்டம் நடத்தியதால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மண்டியிட்டு போராட்டம்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 35). கூலித்தொழிலாளி. இவர் தனது குடும்பத்தினர், உறவினர்கள் சுமார் 50 பேருடன் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர்கள் அனைவரும் இறந்த ராணுவ வீரரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு தரையில் மண்டியிட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் இன்ஸ்பெக்டர் சம்பங்கி மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தனர். அப்போது, போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு அரசு வழங்கிய நிலத்திற்கு பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருவதாகவும், எனவே, பட்டா வழங்க வேண்டும் எனக்கூறி மனு கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவர்களை கலெக்டர் அலுவலகத்திற்குள் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.
பட்டா கேட்டு மனு
இது குறித்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்களது உறவினர் சித்தன் என்பவர் கடந்த 1965-ம் ஆண்டில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் வீரமரணம் அடைந்தார். உயிர் தியாகம் செய்த அவருக்கு சாமிநாயக்கன்பட்டி பகுதியில் 2 ஏக்கர் 92 சென்ட் நிலம் அரசு சார்பில் வழங்கப்பட்டது. ஆனால் 51 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அந்த நிலத்திற்கு பட்டா வழங்கப்படவில்லை. இது தொடர்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் பயன்படுத்தி வரும் நிலத்திற்கு நிலவரி, சொத்துவரி செலுத்தி வருகிறோம். வாரிசு அடிப்படையில் எங்களது குடும்பத்தினர் பட்டா கேட்டு போராடி வருகிறார்கள். அரசு வழங்கிய ஆவணங்கள் எங்களிடம் உள்ளது.
கருணை கொலை செய்யுங்கள்
சமீபத்தில் எங்களுக்கு வழங்கிய நிலத்தில் புதிய போலீஸ் நிலையம் மற்றும் காவலர்கள் குடியிருப்பு கட்டுவதற்காக நிலம் அளவீடு செய்ய அதிகாரிகள் வந்தனர். அவர்களிடம் இதுபற்றி கேட்டபோது, கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனுகொடுக்குமாறு தெரிவித்தனர். இந்த நாட்டிற்காக உயிரிழந்த தியாகிக்கு அதிகாரிகள் இதுபோன்ற செயலை செய்வது வருத்தம் அளிக்கிறது. எனவே, 51 ஆண்டுகளாக அலைக்கழிப்பு செய்து வரும் எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அரசு பட்டா வழங்கவில்லை என்றால் எங்களை கருணை கொலை செய்து விடுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
51 ஆண்டுகளாக பட்டா வழங்காமல் அலைக்கழிப்பு செய்து வருவதைகண்டித்து மண்டியிட்டு ராணுவ வீரரின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.