சிறு வியாபாரிகளிடம் சுங்க வசூல் ஏலத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
தாராபுரம் நகராட்சி நிர்வாகம் சாலையோர சிறு வியாபாரிகளிடம் சுங்க வசூல் செய்ய ஏலம் விடுவதை ரத்து செய்யக்கோரி சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் சார்பில் அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கே.மேகவர்ணன் தலைமை தாங்கினார். அப்போது தாராபுரம் நகரில் சாலையோரங்களில் தள்ளுவண்டி மற்றும் தரைக்கடைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வியாபாரிகள் தினசரி வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுவரை நடைமுறையில் இல்லாத புது நடவடிக்கையாக சாலையோர வியாபாரிகளிடம் தினசரி சுங்க வசூல் செய்ய தாராபுரம் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையானது ஏழை, எளிய சிறு வியாபாரிகளை கடுமையாக பாதிக்கும்.
எனவே இந்த சுங்க வசூல் நடவடிக்கையை ரத்து செய்யவேண்டும் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய நிர்வாகிகள் தாராபுரம் நகராட்சிக்கு சொந்தமான 250க்கும் மேற்பட்ட கடைகளின் வாடகை ஏலம் எடுத்த பயனாளிகள் உள் வாடகைக்கு என்ற பெயரில் கடைகளை வாடகைக்கு விட்டு லட்சக்கணக்காக சம்பாதித்து வருகின்றனர். இதை முறைப்படுத்தி நகராட்சி வருவாயை பெருக்கவும், ஏழை, எளிய வியாபாரிகளை பாதுகாத்திடவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் பி.பொன்னுச்சாமி, பொருளாளர் கோவிந்தராஜ் மற்றும் சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், ஆ.மணியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மோகன் நன்றி கூறினார்.