அகில இந்திய விவசாயதொழிலாளர் சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
அகில இந்திய விவசாயத்தொழிலாளர்கள் சங்கத்தின் குடிமங்கலம் ஒன்றியக்கமிட்டி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று உடுமலை தாலுகா அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
b
உடுமலை தாலுகா குடிமங்கலம் ஒன்றியத்தில் கொங்கல்நகரம், விருகல்பட்டி, சோமவாரப்பட்டி, கொசவம்பாளையம், மூங்கில் தொழுவு, அணிக்கடவு, ஆலாமரத்தூர், ஆத்துக்கிணத்துப்பட்டி, குடிமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏழை விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்கள்குடியிருக்க சொந்தமாக இடம், வீடு இல்லாமல் கூட்டுக்குடும்பங்களாக ஒரே வீட்டில் 2 குடும்பங்களாகவும், வாடகை வீடுகளிலும் சிரமப்பட்டு வசித்து வருகின்றனர்.
கொசவம்பாளையம் ஊராட்சியில் வீடுகட்டி பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் நிலையிலும் வீட்டுமனைபட்டா வழங்காமல் வருவாய்த்துறை அலைக்கழித்து வருகிறது. ஆகவே தமிழக அரசு, கிராமங்களில் இடம் இல்லாத, வீடு இல்லாத ஏழைக்குடும்பங்களுக்கு தலா 3 சென்ட் வீதம் இடம் இலவசமாக வழங்க வேண்டும். அதற்கான பூர்வாங்கப்பணிகளில் வருவாய்த்துறையினர் செயல்படவேண்டும்.
கலந்து கொண்டவர்கள்
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் குடிமங்கலம் ஒன்றியத்தலைவர் எ.வலுப்பூரான் தலைமை தாங்கினார்.
மாவட்ட துணைச்செயலாளர் இ.மாசாணம், ஒன்றிய செயலாளர் வி.தம்புராஜ், பொருளாளர் ஆர்.பழனிச்சாமி, துணைத்தலைவர்டி.முருகன், துணைச்செயலாளர் கே.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.